Top 10 News: இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன், மிஸ்டர் யூனிவர்ஸ் பட்டம் வென்ற தமிழர் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்
அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகர் டெல்லி கணேஷ் உடல் இன்று தகனம்
வயது மூப்பு காரணமாக மறைந்த மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது உடல் நெசப்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. முன்னதாக அவரது உடலுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் மனைவியை 8 துண்டுகளாக வெட்டி, சூட்கேஸில் வைத்து காட்டுப் பகுதியில் வீசிய கணவர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். தாய் மற்றும் நண்பரின் உதவியுடன் மனைவியின் உடல் பாகங்களைக் கிருஷ்ணகிரி காட்டுப் பகுதியில் கோபி வீசியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்
தலைமை நீதிபதி பதவியேற்பு
இந்திய உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக, சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம் மே 13, 2025 வரை நீடிக்கும்.
தேவையற்ற பொருட்கள் மூலம் ரூ.2364 கோடி வருவாய்
மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தேவையற்ற பொருட்களாக மாறிய பேப்பர் உள்ளிட்ட கழிவு பொருட்களை விற்பனை செய்ததில், அரசுக்கு ரூ.2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தூய்மை, பொருளாதார விவேகத்தை மேம்படுத்தும் அரசின் முயற்சி பாராட்டுதலுக்குரியது என இது குறித்து பிரதமர் மோடி பெருமிதம்.
”தமிழர்களின் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்” - இலங்கை அதிபர்
இலங்கை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட ஜாஃப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
பேஜர் தாக்குதல் - இஸ்ரேல் ஒப்புதல்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தானே ஒப்புதல் அளித்ததாக, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்த நிலையில், 3000 பேர் வரை காயமடைந்தனர்.
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்காவிட்டால், ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். ரோகித்திற்கு பதிலாக கே.எல். ராகுல் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் எனவும் தெர்வித்துள்ளார்.
'மிஸ்டர் யூனிவர்ஸ்' பட்டம் வென்ற தமிழ்நாட்டு வீரர்
மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச ஆணழகன் போட்டியில், ”மிஸ்டர் யூனிவர்ஸ்” பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் வென்றுள்ளார். 90 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றதால், சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் பங்கேற்று தங்கத்தை வென்றுள்ளார்.