Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!
காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அவர், ஓய்வின்றி உழைக்கும் உன்னத தலைவர்!
நேருவின் கொள்ளுப் பேரன், இந்திரா காந்தியின் பேரன், ராஜூவ்-சோனியா தம்பதியின் மகன், இப்படி தான் துவக்கத்தில் அறியப்பட்டார் ராகுல் காந்தி. தனது பெயருக்கு பின்னால் இருக்கும் காந்தி தான், அவரை வாரிசு அரசியல்வாதி என முத்திரை குத்தியது. பெரும்பாலும் பெரிய இடத்து பிள்ளைகள் ‛பாஃர்ன் ஆப் சில்வர் ஸ்பூன்’ என்பார்கள். ராகுல் பிறந்தது வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்தது, வாழ்ந்ததெல்லாம் விஐபி குழந்தைகளில் இருந்து மாறுபட்ட வாழ்வு.
அச்சுறுத்தல்... மாறுதல்... வாழ்வு போராட்டம்!
தியாகம் நம்மே மேன்மைபடுத்தும் என்பார்கள். ராகுல் காந்தி குடும்பத்தின் தியாகம், அந்த குடும்பத்தை நிலைய குலையவைத்தது. இந்திரா, ராஜூவ் என அடுத்தடுத்து படுகொலைகளால் குடும்பத்தின் தலைவர்களை இழந்த குடும்பத்தில், கடைசி நம்பிக்கை ஒளியாக இருந்தவர் ராகுல். தந்தை ராஜூவ் இறந்த பிறகு, பல்வேறு விமர்சனங்களை கடந்து சோனியா காந்தி கட்சியை வழிநடத்திய போது, அவர் படும் சிரமங்களை அருகில் இருந்து பார்த்தவர் ராகுல். இந்திரா காந்தி படுகொலைக்கு பின் ராகுலுக்கும், அவரது சகோதரி பிரியங்காவிற்கும் அச்சுறுத்தல் இருந்ததால், கல்வியை கூட வீட்டிலிருந்தே பெற வேண்டிய சூழல். டில்லியில் இளங்கலை முதலாம் ஆண்டை படித்துக்கொண்டிருந்த கையோடு எஞ்சிய ஆண்டுகளை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் படிக்க புறப்பட்டார். அதன் பின்னணியிலும் பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததாக கூறப்பட்டது. 1991ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிரசாரத்திற்கு வந்த ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், ராகுல் காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரிக்கு மாறி, அங்கு கல்வியை தொடர்ந்தார். இப்படி மாறி மாறி, அவரது இளங்கலை படிப்பை முடிக்க 1994 ம் ஆண்டு வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.
நான்கு அறையில் சாதாரண பணியில்...!
தொடர்ந்து இந்தியாவை ஆண்ட குடும்பத்தின் வாரிசு... நினைத்தால் இந்தியா வந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் ராகுல் அதிலிருந்து வேறுபட்டார். மைக்கேல் போர்டேர்ஸ் என்ற நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் மூன்று ஆண்டுகள் ஊழியராக பணியாற்றினார் ராகுல். அவர் பணியாற்றி வெளியேவரும் அந்த நாள் வரை, அவர் யார் என்பதே உடன் பணியாற்றியவர்களுக்கு தெரியாது. அந்த அளவிற்கு எளிமைக்கு சொந்தக்காரர். அதன் பின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை வழிநடத்த 2002ல் மும்பை வந்தார் ராகுல். 2003ல் இந்தியா வந்த ராகுல், 2004ல் அரசியலுக்கு வருகிறார் என ஊடகங்கள் ஆருடம் கூறிக்கொண்டிருந்தன. ஆனால் ராகுல் அமைதியாக தன் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்தா்.
துவம்சம் செய்த துவக்கம்...!
இந்தியா வந்த பிறகு, சோனியாவின் அரசியல் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது அவருடன் பயணிப்பதை ராகுல் வழக்கமாக கொண்டிருந்தார். ராஜூவ் தொகுதி எனக் கூறப்பட்ட அமேதி, அவருக்கு பின் சோனியா தொகுதியானது. 2004ல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிறது. சோனியா தீவிர அரசியலில் வளம் வருகிறார். உடன் வரும் ராகுலை தான் அனைவரும் குறிவைத்தனர். ‛‛நீங்க அரசியலுக்கு வருவீர்களா... தேர்தலில் போட்டியிடுவீர்களா...’ என்றெல்லாம் அவர் முன் கேள்விகள் வைக்கப்படுகிறது. ‛அரசியலை வெறுக்கவில்லை... அரசியல் முடிவு இன்னும் இறுதியாகவில்லை,’’ என்று தனக்கே உரிய கன்னுக்குழி சிரிப்பில் கூறி விட்டு நகர்ந்தார் ராகுல். 2004 மார்ச் மாதம் ராகுல் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் என தகவல் பரவுகிறது. நாடே... அதை உற்று நோக்குகிறது. காங்கிரஸ் பேரியக்கத்தில் களமிறங்கும் அறிவிப்பை பிரகடனப்படுத்தினார் ராகுல். புத்துணர்ச்சி பெறுகிறது காங்கிரஸ். நான்காம் தலைமுறை அரசியல்வாதியாய் நேரு குடும்பத்திலிருந்து இளம் தலைவர் களமிறங்கினார். ராஜூவ், சோனியா என அடுத்தடுத்து தன் வசம் வைத்திருந்த உ.பி.,யின் அமேதி தொகுதி, இந்த முறை ராகுலுக்கு ஒதுக்கப்படுகிறது. மகனுக்கு வழிவிட்டு சோனியா ரேபரேலிக்கு மாறினார். பா.ஜக., வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமேதியில் அமோக வெற்றி பெற்றார் ராகுல். துவம்சம் செய்த துவக்கமாய் இருந்தது ராகுலின் வருகை. வெற்றிக்கு பின் தொகுதியே கதியாய் கிடந்தார். நாடே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தேசிய தலைமைக்கு ராகுல் தயாராகிறார் என்று தலையங்கம் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை.
நான்காம் தலைமுறை தலைவன்!
2006 ஜனவரில் ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ஒருமித்த கருத்தோடு ராகுல் முக்கிய பொறுப்பேற்க நிர்வாகிகள் அனைவரும் கை தூக்கினர். ‛நான் உங்களை கைவிடப் போவதில்லை... அதே நேரத்தில் இப்போது பொறுப்புகளை பெறப்போவதும் இல்லை,’’ என, அங்கேயே அதை மறுத்தார் ராகுல். சாதாரண வட்டச் செயலாளர் பதவியை பெறுவதற்கே அல்லோலகல்லோப்படும் இந்த காலகட்டத்தில், இந்தியாவை ஆளும் கட்சியின் உயர் பொறுப்பை ஒரு இளைஞர் , அனுபவம் கருதி வேண்டாம் என்றது, அனைவர் புருவத்தையும் உயர்த்த வைத்தது. ஆனால் அதன் பின், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசாரகர் ஆனார் ராகுல். 2007 ல் ராகுல் பிரசாரம் செய்து, உபி.,யில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. காங்கிரஸிற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை. 2007 செம்டம்பர் 24ல் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்தோடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் அமைப்புக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு தான், நரைத்த முடி, தள்ளாடிய கால்கள், தாங்கி நடக்கும் கைகள் இல்லாத காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை பார்க்க முடிந்தது. கட்சியில் பரவலாக புது ரத்தம் பாய்ச்சினார் ராகுல். இளைஞர்களுக்கு பொறுப்புகளை வழங்கினார். காங்கிரஸ் அப்போது வேறு வடிவம் பெற்றது. அதன் பின் 2013ல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் தேர்வானார்.
தோல்விக்கு பொறுப்பேற்பு!
2014ல் மோடி அலையில் பாஜக பெற்ற அசுர வெற்றி காங்கிரஸ் கட்சியை நிலைகுலையச் செய்தது. அதற்கு முன் அப்படி ஒரு தோல்வியை காங்கிரஸ் பெற்றதில்லை. கட்சி தலைவர் என்கிற முறையில் சோனியாவுக்கு நெருக்கடி. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனமாகியிருந்தது. அதை சரிசெய்ய வேண்டிய கட்டாயம். 2017 டிசம்பர் 16ல் காங்கிரஸ் கமிட்டி கூடுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். சோனியாவை சில சீனியர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என்பது தான் அப்போது இருந்த குற்றச்சாட்டு. அதை ராகுல் சரிசெய்வார் என நம்பினர். ராகுல் அதை சரிசெய்யவே முயன்றார். அதற்காக பல அதிரடி முடிவுகளை எடுத்தார். ராகுல் வெர்சஸ் மோடி என்றானது. 2019 தேர்தலில் மோடி இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று அரிதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்க இம்முறை, ராகுல் பக்கம் கத்தி திரும்பியது. எந்த தயக்கமும் இல்லாமல் 2019 ஆகஸ்ட் 10ம் தேதி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல். பலர் வலியுறுத்தியும் தன் முடிவில் உறுதியாக இருந்தார் ராகுல்.
தோற்றாலும் இழக்கை நோக்கும் தோட்டா!
ராகுல் அரசியலில் தீவிரமாக இருந்த நேரத்தில் அவரது பேச்சுகளை விமர்சனங்களுக்கு பயன்படுத்தினர். அறியாமையில் பேசுகிறார் என அவரை சிறுவனாக சித்தரிக்க முயன்றனர். ஆனால் தன் மீதான விமர்சனங்களை எல்லாம் ராகுல் எளிதில் கடந்தார். சோனியா தலைமையில் இருந்த சீனியர்கள் கூட மோடியை எதிர்த்து அரசியல் செய்ய தயங்கிய போது, மக்களவையில் மோடியை கடுமையாக சாடினார் ராகுல். ராகுலுக்கு எதிர்வினையாற்றுவதே பாஜக எம்.பி.,களுக்கு முழு நேர வேளையாக இருந்தது. சரிவை சந்தித்தாலும், களப்பணியில் ராகுல் இன்று வரை ஓயவே இல்லை. முன்பு எப்படி இருந்தாரோ அதே வேகத்தில் இன்றும் பாதிப்புகள் எங்கெல்லாம் பதிகிறதோ.... அங்கெல்லாம் முதல் ஆளாக சென்று ஆறுதல் தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். திருமணம் செய்யாமல், வாழ்வை அரசியலுக்கும் ,காங்கிரஸ் இயக்கத்திற்கும் அர்ப்பணித்த ராகுலின் நோக்கு, மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பது தான். அதற்காக காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பயணித்துக்கொண்டே இருக்கிறார். ஓய்வுகள் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் தலைவர் இல்லை. ஆனாலும் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். தனது கொள்ளுத்தாத்தா, பாட்டி, தந்தை விட்டுச் சென்ற இடத்தை மீண்டும் மீட்க வேண்டும் என்கிற வேட்கை அவருக்குள் வேள்வியாய் எரிந்து கொண்டிருக்கிறது.
அனைத்து அரசியல் வாதிகளிடத்திலும் நன் மதிப்பை பெற்ற ராகுல், இறுதியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் போட்டியிட்டு தென் இந்தியா மீதான தன் பாசத்தை வெளிப்படுத்தினார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கல் உப்பு, தயிர் என்றெல்லாம் தமிழக யூடியூப்பர்களுடன் மகிழ்ந்திருந்தார். அவர் இயல்பான் அரசியல் வாதி. இயல்புகளை கடந்த அரசியலை வெறுப்பவர். தன் குடும்ப பாரம்பரியத்தை அப்படியே பின்தொடர்பவர். அதனால் தான் எதிர்கட்சியாக இருந்தாலும் ராகுல் இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் வாதியாக தொடர்கிறார். இன்றும் காங்கிரஸ் தொண்டரின் மனதில் இருப்பது இது தான், கட்சியை மீண்டும் தூக்கிவிடும் ஒரே ‛கை’ ராகுல் என்கிற நம்பிக்‛கை’.