Parliament Session: எதிர்க்கட்சியினர் அமளி.. 15-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணிவரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் பாதி கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரத்தை எதிர்க்கட்சியினரும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை ஆளும் கட்சியினர் எழுப்பி வருவதால் நாடாளுமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு முடங்கியுள்ளது. இதற்கிடையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதனால் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூடியவுடன் மறைந்த புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பபட் , முன்னாள் எம்.பி. இன்னசெண்ட் ஆகியோர் மறைவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் 2 மணிக்கு மீண்டும் அவை கூடிய நிலையில் சபாநாயகர் இருக்கையில் ராஜேந்திர அகர்வால் இருந்தார். அப்போது அவையின் மையப்பகுதிக்கு சென்ற எதிர்க்கட்சியினர் அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் அவையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையில் நேற்று மகாவீரர் ஜெயந்தி விடுமுறையை தொடந்து நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 15வது நாளாக நாடாளுமன்றத்தின் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.