Article 370 Abrogation: 370 சட்டப்பிரிவு ரத்தாகி 2 ஆண்டுகள் நிறைவு : ஜம்மு காஷ்மீர் சந்திக்கும் சிக்கல் என்ன?
ஜம்மு- காஷ்மீரை நிரந்தர பூர்வீகமாக கொள்ளாத லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க தற்போது தகுதி பெற்றுள்ளனர். இது, அதன் அடிப்படை அரசியலை மாற்றியமைப்பதாய் உள்ளது
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 அக்டோபர் 31, 2019-லிருந்து அமலுக்கு வந்ததை அடுத்து, ஏற்கனவே இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டமன்றத்துடன் கூடிய ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், சட்டமன்றம் இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே மாநில அரசுப் பணிகள் கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், ஜம்மு - காஷ்மீரில், கல்வி, வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களின் உரிமை பறிபோகக்கூடுய சூழல் ஏற்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய சட்டங்களை அமல் செய்யும் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பாக இருந்த மாநில சட்டங்களை மாற்றி அமைத்தல் மற்றும் ஏற்புடையதாக்கிட 01.04.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவினைப் பிறப்பித்தது.
மேலும், இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் வாழ்விட விதிமுறைகள் 2020ஐ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதன் கீழ், நிரந்தரக் குடியிரிமைப் பெற்றவர்கள் என்பது ஜம்மு காஷ்மீர்/ லடாக் யூனியன் பிரதேசங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள் எனத் திருத்தப்பட்டது.
புதிய விதிமுறையின் கீழ், ஜம்மு காஷ்மீரை சட்டப்பூர்வ வாழ்விடமாகக் கொண்டவர்கள், அந்த யூனியன் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பணிகளுக்கும், விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- குறைந்தது 15 ஆண்டுகள் ஜம்மு-காஷ்மீரில் தங்கியிருந்ததற்கான சான்றிதழ் (அல்லது)
- ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனத்தில் குறைந்தது ஏழு ஆண்டுகள் பள்ளிப் படிப்பையும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்விலும் தோன்றிய சான்றிதழ்
- (அல்லது)
- ஜம்மு-காஷ்மீரில் நிவாரண மற்றும் புனர்வாழ்வு ஆணையர் (புலம்பெயர்ந்தோர்) அலுவகலத்தில் அகதிகளாக பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்
போன்ற தேவையான ஆவணங்களை விண்ணப்பத்து ஜம்மு காஷ்மீரில் வாழ்விட சான்றிதழ்களை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த புதிய வழிமுறையின் கீழ், ஜம்மு - காஷ்மீரில் நிரந்தரக் குடியிரிமைப் பெறாதவர்கள் கல்வி, வேலைவாய்ப்பை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். குறைந்தது 15 ஆண்டுகள் ஜம்மு-காஷ்மீரில் தங்கியிருந்தால் போதும் என்று விதிமுறையால், மற்ற மாநிலங்களில் இருந்து ஜம்மு- காஷ்மீரில் குடியேறிய 17 லட்சம் பேர் வாழ்விட சான்றிதழை பெற தகுதியிடையவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மறுபுறம், ஜம்மு- காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட நிரந்த குடியுரிமை பெற்றவர்கள், சட்டப்பூர்வ வாழ்விட சான்றிதழை பெற போராடி வருகின்றனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு அளித்துள்ள தகவலின் படி 35,44,939 நபர்கள் வாழ்விட சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில், 32,31,353 நபர்களுக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் சான்றிதழ்களை வழங்கி உள்ளது. தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்காததால் 2,15,438 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சான்றிதழ்கள் வழங்கப்பட்டதில் 31,08,682 நபர்கள் ஏற்கனவே நிரந்தர குடியுரிமைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. மேலும், தேர்தல் முடிவுகளில் வெற்றி,தோல்வியை தீர்மானிக்கும் வாக்கு விகிதமும் அங்கு மிகக்குறைவு. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரை நிரந்தர பூர்வீகமாக கொள்ளாத லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க தர்போது தகுதி பெற்றுள்ளனர். இது, அதனின் அடிப்படை அரசியலை மாற்றியமைப்பதாய் உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி கருத்து: முன்னதாக, அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம், பயங்கரவாதம், உறவினர்களுக்கு ஆதரவான கொள்கை மற்றும் பெருமளவு ஊழல் என்பதைத் தவிர வேறு எதையும் தரவில்லை. சில மக்களிடம் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு இந்த இரு சட்டப் பிரிவுகளையும் ஆயுதங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் வளர்ந்திருக்க வேண்டிய அளவுக்கு அங்கு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியாமல் போனது. நடைமுறையில் உள்ள இந்தக் குறைபாட்டை நீக்கிய பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களின் நிகழ்காலம் நல்லதாக மாறுவது மட்டுமின்றி, எதிர்காலமும் வளமிக்கதாக இருக்கும் என நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.