(Source: ECI/ABP News/ABP Majha)
Tirupati Temple Earnings: திருப்பதியில் முடி காணிக்கை, லட்டு விற்பனை மூலமாக எவ்வளவு வருமானம் வரும் தெரியுமா...?
திருப்பதியில் நடப்பாண்டில் மட்டும் முடி காணிக்கை மூலமாக 126 கோடியும், லட்டு விற்பனை மூலமாக 365 கோடியும் வருவாய் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகவும் பிரசித்த பெற்ற ஆலயம் திருப்பதி ஏழுமலையான் ஆலயம். இந்த கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த கோவிலில் கிடைக்கும் முடி காணிக்கை வருவாயும், லட்டு பிரசாத விற்பனை வருவாயும் இந்தியாவில் உள்ள பிற கோவில்களை காட்டிலும் அதிகம்.
இந்த நிலையில், திருப்பதி ஆலயத்தை நிர்வகிக்கும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் திருப்பதி ஆலயத்திற்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதன்படி, திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயத்தின் 2022 -2023ம் ஆண்டிற்கான வருமானம் ரூபாய் 3 ஆயிரத்து 96 கோடியே 40 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் ரூபாய் 1000 கோடி கோவிலில் உள்ள உண்டியல் மூலமாக வருவாயாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலில் உள்ள பல்வேறு டிக்கெட்டுகள் விற்பனை மூலமாக ரூபாய் 362 கோடி வசூல் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரசாதத்திற்கு வழங்கப்படும் லட்டு விற்பனை மூலமாக ரூபாய் 365 கோடி கிடைக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் வைப்புத்தொகையாக டெபாசிட் செய்வதற்கான வட்டியாக ரூபாய் 668.5 கோடி வசூல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டபங்கள் மூலமாக ரூபாய் 95 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முடிகாணிக்கை மூலமாக ரூபாய் 126 கோடி கிடைக்கும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சேவைகளுக்கான வாரியத்தின் செலவு ரூபாய் 1,360 கோடி ஆகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை வணங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால் திருப்பதிக்கு ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது முடியை காணிக்கையாக அளிப்பதும் அவர்களது நேர்த்திக்கடன்களில் ஒன்றாகும். இந்த முடிகளை விற்பனை செய்வதன் மூலமாக கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிட்டுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்