கொரோனா தடுப்பூசி திருவிழா ஏற்படுத்திய தாக்கம் என்ன? முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?
Corona vaccinations : உதாரணமாக 15, 16, 17 மற்றும் 18 தேதிகளில் முறையே 27,30,359 , 30,04,544 , 26,84,956 மற்றும் 12,30,007 தடுப்பூசிகளும் போடப்பட்டன.
கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது Phase-இன் துவக்கமாக ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். முதல் நாளான ஏப்ரல் 11-ஆம் தேதி 29,33,418 தடுப்பூசிகள் போடப்பட்டன. மறுநாள் 40,04,521 தடுப்பூசிகளும், ஏப்ரல் 13-ஆம் மற்றும் 14ம் தேதிகளில் முறையே 26,46,528 மற்றும் 33,13,848 தடுப்பூசிகளும் போடப்பட்டன. தடுப்பூசி திருவிழாவுக்கு பிந்தைய நாட்களில் கொரோனோ தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கைகள் குறையத் தொடங்கியது. உதாரணமாக 15ம், 16ம், 17ம் மற்றும் 18-ஆம் தேதிகளில் முறையே 27,30,359 , 30,04,544 , 26,84,956 மற்றும் 12,30,007 தடுப்பூசிகளும் போடப்பட்டன.
அதாவது, நாடு முழுவதும்‘ தடுப்பூசி திருவிழா’ நாட்களில் சராசரியாக தினமும் 33.47 லட்சம் தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. இந்த 4 நாட்களை மட்டும் தவிர்த்து, ஏப்ரல் மாதத்தில் சராசரியாக தினமும் 31.38 லட்சம் தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. இதனால், தடுப்பூசி திருவிழா போன்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் இல்லாமலும் கூட இந்த சராசரியை எட்டியிருக்கு முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. உதாரணமாக, கடந்த 18-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 12ம் தேதியை (திருவிழாவின் முதல் நாள்) விட 20% குறைந்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு நாளும், சராசரியாக 45,000 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன. ஆனால், தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 63,800 தடுப்பூசி மையங்களும், இரண்டாம் நாளில் 71,000 மையங்களும், மூன்றாம் நாளில் 67,893 மையங்களும், நான்காம் நாளில் 69,974 மையங்களும் செயல்பட்டன என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ நிபுணர் Rijo M John தனது ட்விட்டர் பதிவில்," தினசரி 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டால் இந்தியாவின் 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் போட குறைந்தது 27 மாதம் ஆகலாம் என்று கடந்த ஜனவரி மாதம் கணித்திருந்தார். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை 9.2% பேருக்கு தான் தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்:
நாடு முழுவதும் கொரோன நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,73,810 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 19,29,329-ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சம் நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, நாட்டின் மருத்துவ வளங்கள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது . பல்வேறு மாநிலங்களில் ஐசியு படுக்கைகள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் கொரோனா பரவலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டிற்கு தேசிய கட்டுப்பாட்டாளர் (இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர்) அனுமதி அளித்தன் அடிப்படையில், இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு பரிந்துரைத்தது.
வழிகள்:
தேவைப்படும் நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி நிர்வகிப்பதில் மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க: முன் கள சுகாதாரப் பணியாளர் காப்பீடு திட்டம் நிறைவு : நீட்டிக்காத மத்திய அரசு