MP Ravindranath Petition: ஓ.பி ரவிந்திரநாத் எம்.பியாக தொடர்வாரா? செக் வைக்குமா உச்சநீதிமன்றம்? நடக்கப்போவது என்ன?
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவிந்திரநாதின் தேர்தல் வெற்றி குறித்த தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்குகிறது.
வழக்கு பின்னணி:
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் அவரது வேட்புமனுவில் , சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்ததாக, தேனி தொகுதி வாக்காளராக உள்ள மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா அதிகம் நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார். அதேசமயம் இது தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை ஏற்கக்கூடாது எனவும் ரவீந்திரநாத் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரவீந்திரநாத் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையாக விசாரணை செய்யவில்லை எனவும், மேல் முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதாகவும் கூறி உத்தரவு பிறப்பித்தது.
இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை:
இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதுமட்டுமின்றி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி ரவிந்திரநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரி தான் என்றால் ஓ பி ரவிந்திரநாத் எம்.பியாக தொடர முடியாது. மாறாக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அதாவது வெற்றிப்பெற்றது செல்லும் என தீர்ப்பு அளித்தால் அவர் எம்பியாக தொடர்வார். இன்றைய தீர்ப்பு எம்.பியாக இருக்கும் ஓபி ரவிந்திரநாத்திற்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிமுகவில் ஒன்றை தலைமை விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அவரது மகன் ரவிந்திரநாத் உள்ளிட்டோரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார். இதனை தொடர்ந்து தேனி எம்.பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. எனவே இன்றைய தீர்ப்பு, ஓ பி ரவிந்திரநாத் வெற்றி செல்லாது என வந்தால் அது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும்.