Cauvery Water: ”தண்ணீரை திறந்தே ஆக வேண்டும்”...தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்றம்!
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கடைபிடித்து நிறைவேற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
Cauvery Water: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கடைபிடித்து நிறைவேற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
காவிரி விவகாரம்:
டெல்டா விவசாயிகளின் அடிப்படையாக உள்ள காவிரி நீர் தற்போது, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது.
மேலும் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டது. இதனிடையே, கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
மேலும், கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கர்நாடகாவில் நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனிடையே ஒழுங்காற்றறுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்தது. தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை செப்டம்பர் 27ஆம் தேதி வரை திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி கர்நாடக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட இடைக்கால மனுக்கள் மீது தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் 5000 கன அடி நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு தற்போது திறக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5,000 கனஅடி நீரை கர்நாடகா திறக்குமா?
தமிழகத்துக்கு விவசாயத்துக்கு மட்டும் தான் காவிரி நீர் தேவைப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் அப்படி இல்லை. கர்நாடகாவை பொறுத்தவரை குடிநீர், விவசாயம் என அனைத்துக்கு நீர் தேவைப்படுகிறது. இதனால், தற்போதைய நிலையில் கர்நாடகா தரப்பில் இருந்து 2,500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதிட்டது.
மேலும் படிக்க