Senthil Balaji: மருத்துவ காரணங்களுக்காக பிணை வழங்க முடியாது.. செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்..
மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பிணைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க முடியாது என கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 17 மணி நேர சோதனைக்கு பின் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின் ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு பின் தனியார் மருத்துவமனையில் அவருக்கு இறுதய அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் காவலில் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டதால் சிகிச்சை முடிந்த பின் அவர் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் சுமார் 300 பக்கங்களுக்கு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே கடந்த 22ஆம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தபட்டார். அப்போது 11 வது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு, வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் பிணைக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நவம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோகத்கி ஆஜராகி அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாமின் வழங்கினால் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை களைத்துவிடக்கூடும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்தச் சூழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அந்த மருத்துவ அறிக்கையை மேற்கோள் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், வலிப்பு வர வாய்ப்புள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய நிலை இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் குறிப்பிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டது. மருத்துவ அறிக்கையில் தீவிர பாதிப்பால் உடனடி சிகிச்சை தேவை என எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்றனர். மேலும், மருத்துவ காரணங்களுக்காகச் செந்தில் பாலாஜி இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்ற நீதிபதிகள், தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும்" என்றார். மேலும் இந்த ஜாமின் மனுவை ரத்து செய்தது. அதுமட்டுமின்றி வழக்கமான கிழமை நீதிமன்றத்தை அனுகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIT-M Suicides: சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை; பேராசிரியர் பணியிடை நீக்கம்- பகீர் பின்னணி
Flood Warning: மக்களே உஷார்.. வெள்ள அபாய எச்சரிக்கை; செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் மிகை நீர்