Kerala: காய்ச்சல் வந்த குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி.. அலட்சியமா ஊசி போட்ட நர்ஸ்..!
கேரளா மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தைக்கு தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியரை கேரளா அரசு பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
எர்ணாகுளம் அருகே அங்கமல்லியில் உள்ள தாலுக்கா மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசியை தவறாக போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல் வந்த குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி:
கேரள மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர்கள் எர்ணாகுளம் அருகே அங்கமல்லியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த குழந்தை ரத்த பரிசோதனை செய்வதற்காக ஆய்வகத்தின் முன் காத்திருந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவர், ராபிஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு போட வேண்டிய ரேபிஸ் தடுப்பூசியை மாறுதலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செலுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடந்துள்ளது. இதனால் பதட்டமடைந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில சுகாதாரத் துறை, மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியரை வேலையை விட்டு ரத்து செய்ய முடிவு செய்தது. அதாவது அந்த செவிலியரை பணிநீக்கம் செய்துள்ளனர். பில்களை செலுத்துவது உள்ளிட்ட சில நடைமுறைகளை முடிக்க பெற்றோர் சென்றபோது குழந்தை ஆய்வகத்தின் முன் தனியாக காத்திருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக செலுத்தப்பட்ட ஊசி:
மேலும், "ரேபிஸ் தடுப்பு தடுப்பூசிக்காக காத்திருக்கும் மற்றொரு குழந்தையை அந்த செவிலியர் தவறாக நினைத்து தடுப்பூசி செலுத்தியது தெரியவந்துள்ளது" என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் இல்லை என்பதால் பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பெற்றோர்களிடம் இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களும் பெறப்பட்டுள்ளது என போலீசார் கூறியுள்ளனர். மேலும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவீக்கப்பட்டுள்ளது.