டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஓசி பயணம்! ஒரே நாளில் ரூ. 8.6 லட்சம் அபராதம் வசூல்! ஷாக் கொடுத்த ரயில்வே
மகாராஷ்ட்ராவில் தானே ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளிடம் இருந்து ரூபாய் 8.6 லட்சம் ஒரே நாளில் அபராதமாக வசூலிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது தானே. மும்பையை போலவே தானே நகரமும் மகாராஷ்ட்ராவின் முக்கிய நகரம் ஆகும். லட்சக்கணக்கான மக்கள் தொகை கொண்ட தானே நகரத்தில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. தானே ரயில் நிலையத்தை மட்டும் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரயில் நிலையம் மட்டுமின்றி வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களும் தானேவில் ரயில்நிலையத்தில் நின்று செல்கின்றன.
டிக்கெட் பரிசோதனை:
இந்த நிலையில், தானே ரயில் நிலையத்தில் பலரும் டிக்கெட் எடுக்காமல் தொடர்ந்து பயணித்து வருவதாக அதிகாரிகளுக்கு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தானே ரயில் நிலையத்தில் நேற்று 120 டிக்கெட் பரிசோதர்கள் டிக்கெட் பரிசோதனை பணியில் ஈடுபட்டனர். 3 மூத்த அதிகாரிகள் தலைமையில் இந்த அதிரடி சோதனை நடந்தது.
இந்த சோதனையில் ஏராளமானோர் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த பரிசோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பலரையும் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதிகாரிகளின் இந்த பரிசோதனைக்கு 30 ரயில்வே போலீசார் பாதுகாப்பாக இருந்தனர்.
ரூபாய் 8.6 லட்சம்:
இந்த பரிசோதனையின் முடிவில் 3 ஆயிரத்து 92 பேர் டிக்கெட் பெறாமல் முறையில்லாமல் பயணித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூபாய் 8.6 லட்சம் நேற்று ஒருநாளில் மட்டும் வசூலிக்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மும்பையிலும், மும்பை புறநகர் பகுதியிலும் மின்சார ரயில்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பலரும் டிக்கெட்டுகளை எடுக்காமல் செல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதை தொடர்ந்தே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
தானே மட்டுமின்றி பயணிகள் அதிகம் செல்லும் மற்ற ரயில் நிலையங்களிலும் இதுபோன்று அதிரடி சோதனைகளை நடத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். தானே ரயில்நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளிடம் 8.6 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Amartya Sen: 'அப்பா நல்லா இருக்காரு' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமர்த்தியா சென் மகள்!
மேலும் படிக்க: Uttar Pradesh: வாரணாசியில் கோயில் வடிவில் அரசு அலுவலகங்களுக்கான இரட்டை கோபுரம் - திட்டம் தீட்டும் யோகி அரசு