Uttar Pradesh: வாரணாசியில் கோயில் வடிவில் அரசு அலுவலகங்களுக்கான இரட்டை கோபுரம் - திட்டம் தீட்டும் யோகி அரசு
புகழ்பெற்ற வாரணாசியில் கோயில் வடிவில் அரசு அலுவலகங்களுக்கான இரட்டை கோபுரத்தை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக வாரணாசி உள்ளது. அங்குள்ள காசியில் உள்ள சிவாலயம் உலகப்புகழ்பெற்றது ஆகும்.
கோயில் வடிவில் இரட்டை கோபுரம்:
இந்த நிலையில், உத்தரபிரதேச அரசு வாரணாசியில் இரட்டை கோபுரம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரட்டை கோபுரமானது கோயில்களின் வடிவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை கோபுரமானது 10 அடுக்கு மாடிகளாக கட்டப்பட்டுள்ளது.
இந்த இரட்டை கோபுரத்தில் அனைத்து பிரிவு அலுவலகங்களையும் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 275 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. வாரணாசி வளர்ச்சி துறை அதிகாரி அபிஷேக் கோயல் இந்த இரட்டை கோபுரமானது 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான திட்டமதிப்பீடு அளிக்கப்பட்டது.
மண்டல அளவிலான அலுவகங்கள்:
இந்த இரட்டை கோபுரத்தில் 59 மண்டல அளவிலான அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கட்டிடத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பாதிப்பில்லாமல் பசுமையான சூழலில் இதை கட்ட உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த கட்டிடத்தில் அத்தியாவசிய தேவையான வங்கிகள், பல்பொருள் அங்காடி, மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள், தேநீர் விடுதிகள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளும் கட்ட திட்டமதிப்பீட்டில் முன்மொழியப்பட்டுள்ளதாக வாரணாசி வளர்ச்சி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த இரட்டை கோபுரத்தை உத்தரபிரதேச அரசு சர்வதேச தரத்தில் கட்ட திட்டமிட்டுள்ளது.
கட்டிட பணிகள்:
ஏற்கனவே, வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் சிவன் வடிவில் கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் லக்னோவில் புதிய விதானசவுதா கட்டிடம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், அந்த மாநிலத்தில் புதியதாக டி.ஜி.பி. தலைமையகம் கட்டுவது குறித்தும், லக்னோ உயிரியல் பூங்கா கட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 2027ம் ஆண்டுக்கு முன்பு இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 5 State Election 2023: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் - 5 மாநில சட்டமன்றங்களின் விவரம் - யார் கைவசம் ஆட்சி, யாருக்கு சாதகம்?
மேலும் படிக்க: Morning Headlines: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. எகிறி அடித்த I.N.D.I.A கூட்டணி.. இன்றைய முக்கியச் செய்திகள்..