இடுக்கியில் டெம்போ ட்ராவலர் அடித்துச் செல்லப்பட்டது! உயிர் சேதம் தவிர்ப்பு, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை
ஆற்றில் டெம்போ வாகனம் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் அக்டோபர் 22ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அக்டோபர்16ல் முடிவுக்கு வந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் மழை சற்று குறைந்த நிலையில், பல மாவட்டங்களில் இரவு முழுதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
இம்மாநிலத்தில் அக்டோபர் 22ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுத்தது. இடுக்கி மாவட்டத்தில் நேற்று மழை குறைந்ததால் மதியம் வரை சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது. அதனால் விடுமுறையில் வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 22ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது. இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு. அக்டோபர் 20ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு. அக்டோபர் 21ல் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் அக்.22ல் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.
கேரளாவின் இடுக்கியில் பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக அதிகரித்தது. இதனையடுத்து முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கூட்டார் நகரத்தின் அருகே ஆற்றின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக டெம்போ வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆற்றில் டெம்போ வாகனம் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















