பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் புழு... மருத்துவமனையில் மாணவர்கள்... தெலங்கானாவில் அதிர்ச்சி
சுமார் 50 மாணவர்கள் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் நாராயண்கேட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
தெலங்கானா சங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசு கஸ்தூர்பா பள்ளியை சேர்ந்த 50 மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாராயண்கேட் வருவாய் கோட்ட அலுவலர் அம்பாதாஸ் ராஜேஷ்வர் கூறுகையில், "இன்று அரசு கஸ்தூர்பா பள்ளியில் உள்ள பெண்கள் விடுதியில் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் காலையில் போஹாவை காலை உணவாக உட்கொண்டனர். அந்த சமயத்தில், ஒரு சில மாணவர்கள் போஹாவில் புழுக்களை கண்டனர்.
பின்னர், வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலியால் சுமார் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக நாராயண்கேட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். மாணவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்படும்.
Over 50 govt Kasturba school students suffered food poisoning after having Poha as breakfast in Sangareddy, few students found worms in Poha. Later over 50 students suffered vomiting, nausea, giddiness, stomach pain, students shifted to govt hospital for treatment. #Telangana pic.twitter.com/GaYTgRh2IJ
— Sowmith Yakkati (@sowmith7) November 5, 2022
ஊழியர்கள் யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். உள்ளூர் எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்" என்றார்.
சமீபத்தில், நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த பொழுது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அதேபோல, திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே உள்ள மோத்தக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும், ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்துள்ள சூளகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. அதில், மதிய உணவை சாப்பிட்ட 100 பேரில் ஏழு மாணவர்களுக்கு திடீரென்று லேசான மயங்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.