துபாயில் டெலிவரி ரைடராக பணிபுரிந்துவந்த இந்திய இளைஞர் மரணம்: போலீஸ் வழக்குப்பதிவு
துபாயில் பணிபுரியும் தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய NRI பிப்ரவரி 26 அன்று விபத்தில் சிக்கி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்
துபாயில் உணவு டெலிவரி பணிபுரிந்து வந்த தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி 26 அன்று விபத்தில் சிக்கினார். அவர் உடனடியாக துபாயில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குடும்பத்தினர் முயற்சியால் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து இறந்தவரின் சகோதரரின் புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது பஞ்சகுட்டா காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இறந்தவர், 2019 முதல் துபாயில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்த, தெலுங்கானாவில் உள்ள மதுலாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூசலா ராமு (25). இச்சம்பவத்தின் விவரத்தின்படி, பிப்ரவரி 26 ஆம் தேதி, ராமு தனது பைக்கில் வாடிக்கையாளருக்கு பார்சலை விநியோகிக்கச் சென்றபோது விபத்துக்குள்ளானார்.
பின்னர்,அவர் துபாயில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு ஏர் ஆம்புலன்சில் அழைத்து வந்தனர்.
முன்னதாக, ராமு மார்ச் 8 ஆம் தேதி NIMSக்கு மாற்றப்பட்டார், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவர், அங்கு மார்ச் 11 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். விபத்தைத் தொடர்ந்து, உடனடியாக, துபாயில் உள்ள அல் பர்ஷா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இருப்பினும், ஹைதராபாத்தில் இறந்த பிறகு, இறந்தவரின் சகோதரரான மகேஷ் புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் விபத்தில் சிக்கி இறந்ததற்கு இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தூதரகம் மூலம் இந்த விபத்தில் இறந்த நபருக்கு நீதி கிடைக்கும் என அவரது உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு வேலை மோகத்தால் இவ்வாறாக பல்வேறு நாடுகளுக்கும் பறக்கும் இளைஞர்கள் தங்கள் இளமைக்காலம், குடும்பம், நண்பர்கள் என பலவற்றையும் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. சரியான நபர் மூலம் சரியான முறையில் சரியான இடத்தில் வேலைக்குச் சேர்பவர்கள் தப்பிக்கின்றனர். ஆனால் போலி ஏஜன்டுகளிடம் பண இழப்பவர்கள் எங்கேயோ சிக்கி தவிக்கின்றனர். க.பெ.ரணசிங்கம் படத்தில் வருவது போல் காணாப் பிணமாக போவோரும் உண்டு. வெற்றிக்கொடிகட்டு படத்தில் வரும் சார்லியைப் போல் பணத்தை இழந்து பித்துபிடித்துத் திரிவோரும் உண்டு. எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து அனுமதி பெற்ற அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்குச் சென்றால் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை மெய்ப்பிக்கலாம் இல்லையேல் சங்கடம் மட்டுமே மிச்சமாக வந்து நிற்கும்.