அரசுப் பணி ஒருபுறம்.. அரவணைக்கும் கரம் மறுபுறம் - வியக்க வைக்கும் தஸ்லிமாவின் கதை!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். மனம் இருந்தால் மனிதநேயமும் உண்டு என்று தஸ்லிமாவுக்காக அதை திரித்துக் கொள்ளலாம்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். மனம் இருந்தால் மனிதநேயமும் உண்டு என்று தஸ்லிமாவுக்காக அதை திரித்துக் கொள்ளலாம்.
சாலையில் அடிபட்டுக் கிடக்கும் மனிதரைக் கண்டும் காணாமல் போவோரும் உண்டு. அதற்கு நேரமில்லையே என்று மனசாட்சிக்கு சமாதானம் கூறிக் கொள்வார்கள். உண்மையில் தேவை நேரமல்ல மனம். அதைத்தான் தஸ்லிமா அன்றாடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
யார் இந்த தஸ்லிமா?
தெலங்கானா மாநிலம் முளுகு மாவட்டத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றுகிறார் தஸ்லிமா முகமது. 36 வயதில் சார் பதிவாளர் பணி என்றால் 'வேறென்ன வேறென்ன வேண்டும்..' என்று ஹாயாக வாழ்க்கையை நகர்த்தவே நம்மில் பலரும் முற்படுவோம். ஆனால் தஸ்லிமாவுக்கு பதவியும் பணமும் அல்ல மனிதமும் அன்பும் தான் நிறைவைத் தருகிறது. வார இறுதி நாட்களயும், விடுமுறை நாட்களையும் அவர் தன் மனதுக்கு இனிய செயல்களைச் செய்து கடத்துகிறார். குடும்பங்களை விட்டுப் பிரிந்து முகவரி இழந்து முகமற்றுத் திரிவோரை அவரவர் குடும்பத்துடன் இணைக்கும் பாலமாக இருக்கிறார். அதுவும் குறிப்பாக மனநலன் பாதிக்கப்பட்டு விட்டேத்தியாக திரிவோரை மீட்டு அவர்களின் உறவுகளுடன் இணைத்து வைக்கிறார்.
இதுவரை 21 பேரை அவர்களின் குடும்பத்தோடு இணைத்து வைத்துள்ளார். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் நம்மூரில் அதற்காக மட்டும் பயன்படுவதில்லை ஆதரவற்றோரின் புகலிடமாகவும் இருக்கின்றன. அங்குதான் தஸ்லிமா ஆதரவற்றோரை கண்டுபிடிக்கிறார். பின்னர் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுடன் இணைந்து மீட்கப்பட்டோரை அவர்களின் உறவுகளுடன் சேர்த்து வைக்கிறார்.
தஸ்லிமா தனது சமூக சேவை பயணம் குறித்து கூறுகையில், "முதன்முதலில் கடந்த ஆண்டு தான் இதற்கான தொடக்கப் புள்ளி அமைந்தது. நான் எனது அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது முளுகு பகுதியில் ஒரு நபர் ஆதரவற்றுக் கிடந்தார். அவரிடம் விசாரித்தபோது தனது கதையைச் சொன்னார். போலீஸார் உதவியுடன் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தாருடன் சேர்த்துவைத்தேன்" என்றார்.
தஸ்லிமாவுக்கு மனிதநேயத்தை வித்திட்டது அவரின் தந்தை. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவரும் இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபாட்டு காட்டுபவரே.
தஸ்லிமா விவசாயப் பணிகளும் செய்கிறார். அவ்வப்போது தன் ஊரில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயப் பணி செய்யும் அவர், அதன் மூலம் கிடைக்கும் கூலியை அங்கே பணியாற்றும் மற்ற பெண்களிடம் கொடுத்து விடுகிறார்.
விவசாயப் பணி பற்றி தஸ்லிமா, "பணத்துக்காக நான் வயலில் இறங்கி வேலை செய்யவில்லை. கிடைக்கும் ரூ.250 கூலியை நான் அங்கிருக்கும் யாரிடமாவது கொடுத்து விடுகிறேன். வயலில் வேலை செய்யும் போது எனக்கு மன மகிழ்ச்சி கிட்டுகிறது. அதனை அலுவலகப் பணியுடன் ஒப்பிட முடியாது. எனது எல்லாச் செயல்களிலும் எனது கணவரும் குழந்தைகளும் உறுதுணையாக இருக்கின்றனர்" என்று கூறினார்.
மனம் ஒரு கோயில் என்பதை தஸ்லிமா போன்றவர்கள் நிரூபிக்கிறார்கள். அவரின் கதை படித்துக் கடப்பதற்கு அல்ல; முடிந்தவரை பின்பற்றுவதற்கே!