தெலங்கானா: தலைமைச்செயலகத்தில் கோயில், சர்ச், மசூதிகளை திறந்து வைத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ரிப்பன் வெட்டி மசூதியை திறந்து வைத்தார். முதல்வர் சந்திரசேகர் ராவ் அருகில் இருந்தார்.
தெலுங்கானா தலைமைச் செயலகத்துக்கு முதல்முறையாக விஜயம் செய்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உடன் இணைந்து மாநில நிர்வாகத் தலைமைச் செயலக வளாகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.
ஒரே இடத்தில் கோயில், மசூதி, சர்ச்
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மூன்று வெவ்வேறு மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரே இடத்தில் அமைத்து, மாநில அரசு முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், இதனை மத்திய அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஒரே இடத்தில் மூன்று வழிபாட்டுத் தலங்கள் இருப்பது அனைவரும் பின்பற்ற வேண்டிய அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் உண்மையான அடையாளமாகும் என்றும் அவர் தமிழிசை சவுந்தரராஜன் இருந்த மேடையிலேயே கூறினார். "பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு ஒன்றாகச் செயல்படலாம், பிரார்த்தனை செய்யலாம், அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழலாம் என்பதற்கு நாங்கள் சிறந்த முன்மாதிரியை அமைத்துள்ளோம். இதிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவே பாடம் கற்றுக்கொள்ளலாம்" என்று அவர் பேச, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அழைப்பாளர்கள் கூடி கரவொலி எழுப்பினர்.
Inaugurated ancient renovated and Newly Constructed Sri Amma Varu Temple,Church & Mosque in the Premises of Dr.B.R.Ambedkar Telangana State Secretariat alongwith Hon'ble @TelanganaCMO Shri.Chandrashekar Rao garu,Hon'ble Ministers,MPs, MLCs,MLAs,@TelanganaCS Smt.Santhi Kumari,… pic.twitter.com/l7YPQAMlBG
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 25, 2023
கோயில் திறப்பு
மேலும் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதுகாக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். சண்டியாகம் மற்றும் பூர்ணாஹுதியில் பங்கேற்று நல்ல போச்சம்மா கோவிலில் நடந்த சிலை நிறுவுதல் மற்றும் பூஜையில் கவர்னர் மற்றும் முதல்வர் பங்கேற்றனர். இதையொட்டி உள்ள சிவன் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் தேவாலய திறப்பு விழாவில் கவர்னர் மற்றும் முதல்வர் பங்கேற்றனர். தமிழிசை சௌந்தரராஜன் ரிப்பன் வெட்டிவிட்டு முதல்வருடன் தேவாலயத்திற்குள் நுழைந்தார். பிஷப் எம்.ஏ.டேனியல் பைபிள் வாசித்த பின், ஆளுநர் கேக் வெட்டி முதல்வர் மற்றும் மதத் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர், சிஎஸ்ஐ பிஷப் கே.பத்மா ராவ், பிஷப் ஜான் கொல்லப்பள்ளி ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
சர்ச் திறப்பு
தலைமைச் செயலக கிறிஸ்தவ சங்கப் பணியாளர்கள் ஜேக்கப் ரோஸ் பூம்பாக் உள்ளிட்டோர் ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினர். பல்வேறு தேவாலயங்களைச் சேர்ந்த ஆயர்கள், போதகர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தலைமைச் செயலக வளாகத்தில் தேவாலயம் கட்டியதற்கு ஆயர்கள், போதகர்கள் மற்றும் செயலக கிறிஸ்தவ சங்க ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். "வேறு எந்த மாநிலச் செயலகத்தைப் போலல்லாமல், தெலுங்கானா அரசு சர்ச் ஒன்றைக் கட்டியது, மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது," என்று அவர்கள் கூறினர்.
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டமன்ற வளாகத்திற்குள் அங்குள்ள பழமை வாய்ந்த கோவில்களை புதுப்பித்து அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சட்டமன்ற வளாகத்திற்குள் திருக்கோவில்,தேவாலயம்,பள்ளிவாசலை திறந்து வைத்தேன். pic.twitter.com/tw2vOsbtWJ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 26, 2023
மசூதியை திறந்து வைத்த தமிழிசை
பின்னர், தேவாலயத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள மசூதிக்கு கவர்னர் மற்றும் முதல்வர் சென்றனர். இமாம்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் அவர்களை இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வரவேற்றனர். முன்னாள் தமிழக பாஜக தலைவரான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரிப்பன் வெட்டி மசூதியை திறந்து வைத்தார். முதல்வர் சந்திரசேகர் ராவ் அருகில் இருந்தார். உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி, எம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி, எம்ஐஎம் தளத் தலைவர் அக்பருதின் ஒவைசி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்பட வேண்டும்
"இது ஒரு புனிதமான மற்றும் மிகவும் மகிழ்ச்சியான நேரம். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் நம் மீது உள்ளது. மாநிலத்தில் சகோதரத்துவம் மலர வேண்டும். மத நல்லிணக்கத்தை பேணுவதற்கான முயற்சிகளை அரசு தொடரும். சிறந்த கட்டிடக்கலையுடன் தலைமைச் செயலக வளாகத்தில் புதிய மசூதி கட்டப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நாடு கடைபிடிக்கும் மதச்சார்பின்மையை பிரதிபலிக்கும் வகையில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்பட வேண்டும். அனைத்து சமூகத்தினரின் நட்புறவு என்றென்றும் தொடர வேண்டும் என்று நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்," என்று சந்திரசேகர ராவ் கூறினார்.