கூப்பிட ஈசியா இருக்கணுமே... : மருமகள் ரேச்சல் ஐரீஸ் பெயரை ராஜ்ஸ்ரீயாக மாற்றிய லல்லு பிரசாத் யாதவ்
ராஷ்ட்ரீய ஜனதா தல தலைவரும், பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராஷ்ட்ரீய ஜனதா தல தலைவரும், பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது மருமகள் ரேச்சல் ஐரீஸுக்கு ராஜ்ஸ்ரீ எனப் பெயர் சூட்டியுள்ளாராம் மாமனார் லாலு பிரசாத் யாதவ். தேஜஸ்வி, ரேச்சல் திருமணம் கடந்த வாரம் நடந்தது. பெரிய இடத்து திருமணம் காதும் காதும் வைத்ததுபோல் நடந்துவிட்டது. ஒரு வாரம் கழித்து நேற்று தேஜஸ்வி, ரேச்சல் விமானம் மூலம் பீகார் வந்தனர். மணப்பெண் சிவப்பு நிற சேலையிலும், மணமகன் வெள்ளை குர்தாவிலும் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவியது.
இரவு 8.30 மணியளவில் பாட்னா விமான நிலையத்திற்கு வந்தடைந்த தம்பதியை வரவேற்க ஆர்ஜேடி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். கட்சியினர் மேளம் வாசித்து ஆடிப்பாடி அமர்க்களப்படுத்தினர்.
இரவு 10 மணியளவில் புதுமணத் தம்பதி சர்குலர் ரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்தடைந்தனர். அங்கே தேஜஸ்வியின் தாயாரும் லாலுவின் மனைவியுமான ராப்ரி தேவி, மணப்பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். 32 வயதான தேஜஸ்வி யாதவ் கடந்த 2015-இல் தான் அரசியலில் பிரவேசித்தார். எடுத்த எடுப்பிலேயே பீகாரின் துணை முதல்வரானார். இந்நிலையில் அவர் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மணமுடித்துள்ளார்.
பெயர் மாற்றம்:
தேஜஸ்வியின் மனைவி ரேச்சல் ஐரிஸுக்கு மாமனார் லாலு பிரசாத் யாதவ் பெயர் மாற்றம் செய்துள்ளார். மருமகளுக்கு ராஜ்ஸ்ரீ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இருப்பினும், வெறும் பெயர் மாற்றம் மட்டுமே நிகழ்ந்ததா இல்லை மதமாற்றமும் நிகழ்ந்ததா என்பது பற்றிய தெளிவான உறுதியான தகவல் ஏதுமில்லை. மேலும் தேஜஸ்வி தனது மனைவி பற்றி வேறு ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் மற்றதை தெரிந்து கொள்ளலாம் என்றார். மனைவியின் பெயருக்குப் பின்னால் குடும்பப் பெயரான யாதவ் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, "நிச்சயமாக ராஜ்ஸ்ரீ யாதவ்” என்றுதான் இருக்கும் என்று புன்னகையுடன் பதிலளித்துச் சென்றார் தேஜஸ்வி யாதவ். எதற்கு ராஜ்ஸ்ரீ என பெயர் வந்தது என கேட்டதும் பேரை அழைக்க சுலபமாக இருக்கும் என வைக்கப்பட்டதாக கூறினார் தேஜஸ்வி
திருமணத்தை ஏன் ரகசியமாக முடித்தீர்கள் என்ற கேள்விக்கு, இது இரண்டு குடும்பங்கள் இணைந்த விழா இதைப் பற்றி வெளியில் சொல்லி நிறைய விருந்தினர்களை அழைத்து இதை கவன ஈர்ப்பு நிகழ்வாக நாங்கள் மாற்ற விரும்பவில்லை.
மேலும், தேஜஸ்வியின் தாய் மாமன் சாது யாதவ் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்தார். என் மாமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அவர். இப்போது அவர் கூறிவரும் கருத்துகளை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், நாம் அனைவரும் ராம் மனோகர் லோஹியாவின் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம். அவர் சமூக பேதங்களை அகற்றவே போதனை செய்தார். அதையே நான் பின்பற்றுகிறேன் என்றார்.