News headlines : வேளாண் சட்டங்களை எதிர்த்து 'பாரத் பந்த்’, ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் தொடக்கம்... மேலும், சில செய்திகள்
News Headlines Today in Tamil: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய முக்கியச் செய்திகள் சில...
Tamil News Headlines Today:
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் (பார்த் பந்த் ) நடைபெறுகிறது .
தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற மூன்றாவது மாபெரும் தடுப்பு மருந்து முகாமில் 24,85,814 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால், பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில், திங்கட்கிழமை தடுப்பூசி போடப்படாது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், மும்பை அணிக்கு ஆட்டத்தில் பெங்களூர் அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைக்கிறார். ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் தொடங்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குலாப் புயல் நிலவரம் குறித்து ஆந்திரா மற்றும் ஒரிசா முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். பேரிடர் நிலையை எதிர் கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.
இந்திய பொருளாதாரத்தின் மாறிவரும் தேவைகளை எதிர்கொள்வதற்கு பாரத ஸ்டேட் வங்கியைப் போன்று 4-5 வங்கிகள் இந்தியாவிற்குத் தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பெரும்பான்மை மக்களுக்கு பயன்தரக்கூடிய வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதியம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
குமரி பகுதி, மன்னார் வலைகுடா மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இன்று குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,285 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 2,087 பேர் கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.