முதியவர்கள் வாழ பாதுகாப்பற்ற மாநிலமாகும் தமிழ்நாடு?...வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரம்!
கடந்த 20221ஆம் ஆண்டு, முதியவர்கள் கொலை செய்யப்படுவது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20221ஆம் ஆண்டு, முதியவர்கள் கொலை செய்யப்படுவது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் சம்பந்தப்பட்ட 191 கொலை வழக்குகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 202 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் பதிவான 1,686 கொலை வழக்குகளில் 11.3% ஆகும். மொத்தமாக, 1,741 பேர் கொல்லப்பட்டனர். முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கொலைகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. அங்கு பதிவான 2,142 கொலை வழக்குகளில் 181 மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதியோர் சம்பந்தப்பட்ட கொலைகளின் எண்ணிக்கை 2019 முதல் மாநிலத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மொத்த கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் முதியவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், மாநிலத்தில் பதிவான 1,745 கொலை வழக்குகளில் 173 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2021 இல், புள்ளிவிவரங்களின்படி 1,686 கொலை வழக்குகளில் 191 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2021 புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய காலத்தில், முதியோர் கொலைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. கடந்த சில மாதங்களாகவே மாநிலத்தில் முதியோர் கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது குற்ற அறிக்கை வெளியாகி உள்ளது. ஜூலை 2022 இல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், வயதான தம்பதியினர் அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் திருப்பூரில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
முதியோர்கள் அதிகம் உள்ள சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய முதியோர் 2021 அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் முதியோர்களின் சதவீதம் 13.6 ஆகும். இது நாட்டிலேயே இரண்டாவது மிக அதிகம். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 16.5% மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
தரவுகளை உன்னிப்பாகப் பகுப்பாய்வு செய்ததில், முதியோர்களைக் கொலை செய்வதில் தமிழகமும் அதிக குற்ற விகிதத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றனவோ அதுவே குற்ற விகிதமாக கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, கேரளாவில் பதிவாகியுள்ள 337 கொலைகளில் 17.2% முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டில் 11.3 சதவீதத்தை விட அதிகம். இருப்பினும், கேரளாவில் குற்ற விகிதம் 0.99 ஆகவும், தமிழ்நாட்டில் 1.83 ஆகவும் பதிவாகியுள்ளது.
முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளின் குற்ற விகிதம் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு சில யூனியன் பிரதேசங்கள் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் மட்டுமே குற்ற விகிதம் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.