கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு
June 5 Covid-19 Live News Updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 651 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்து 646 நபர்கள் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 463 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துளளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 26 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தேவை என்று மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை அளித்துள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் இன்று நேரில் ஆய்வு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தினசரி ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்ட வாரியாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று நேரில் ஆய்வு செய்தார். அவர் மாவட்ட ஆட்சியர்களுடன் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை கேட்டறிந்தார்.
டெல்லியில் 414 ஆக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக நாட்டின் தலைநகரான டெல்லி மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முழு ஊரடங்கு உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று விகிதம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 414 நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.53 சதவீதமாக குறைந்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 28 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, டெல்லி முழுவதும் 6 ஆயிரத்து 731 நபர்கள் மட்டுமே கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிப்பிரதிநிதிகளுடனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பெரும்பாலானா கட்சிகள் பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கட்சிப்பிரதிநிதிகளின் கருத்துக்களை விரிவாக முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும். இதன்பிறகு, பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுத்து அறிவிப்பார் என்றார்.
புதுக்கோட்டையில் 4 மாதக்குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். சில இடங்களில் கொரோனா பாதிப்பிற்கு குழந்தைகள் பலியாகி வரும் பரிதாபங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. சிவகங்கை, சிங்கம்புணரி அருகே மந்தக்குடிப்பட்டியைச் சேர்ந்த பெற்றோர்களின் இந்த 4 மாதக்குழந்தைக்கு கடந்த 29-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிறந்த நான்கே மாதங்களில் பச்சிளங்குழந்தை கொரோனாவால் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டினரின் விசா காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் - உள்துறை அமைச்சகம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக விமானம் கிடைக்காமல், இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விசா அல்லது தங்கும் காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " கடந்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக செல்லுபடியாகும் விசா மூலம் இந்தியா வந்த வெளிநாட்டினர் பலர், கொரோனா தொற்று காரணமாக விமானம் கிடைக்காததால் இங்கேயே தங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக, இவர்கள் தங்கள் விசா காலத்தை நீட்டிப்பதிலும் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஜூன் 29ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 2020 ஜூன் 30ம் தேதியுடன் விசா காலம் முடிவடைந்த வெளிநாட்டினருக்கு, சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்கள் வரை விசா செல்லுபடியாகும் என கூறியிருந்தது.
அப்போது முதல் ஒவ்வொரு மாதமும், வெளிநாட்டினர் தங்கள் விசா மற்றும் தங்கும் காலத்தை மாதந்தோறும் நீட்டித்து வந்தனர்.
இயல்பான விமான போக்குவரத்து இன்னும் தொடங்காததால், இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்து, வெளிநாட்டினருக்கான விசா அல்லது தங்கும் காலத்தை அபராதம் இன்றி வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இது போன்ற வெளிநாட்டினர், தங்கள் விசா நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை, வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் (FRRO / FRO) விண்ணப்பிக்க தேவையில்லை" என்று தெரிவித்தது.