Gyanvapi Mosque : ஞானவாபி விவகாரம்.. மசூதி கமிட்டியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மசூதி கமிட்டி வழக்கு தொடர்ந்தது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி (Vyas Tehkhana) மூடப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.
பரபரப்பை ஏற்படுத்தும் ஞானவாபி விவகாரம்:
இதை தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மசூதியில் இந்திய தொல்லியில் துறை ஆய்வு மேற்கொண்டது. சமீபத்தில், அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. இதற்கிடையே, மசூதி இருக்கும் இடத்தில் கோயிலை மீண்டும் கட்ட அனுமதிக்க வேண்டும் என இந்து தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மசூதி கமிட்டி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின்போது, ஞானவாபி மசூதி வளாகமே கோயிலின் ஒரு பகுதி என இந்து தரப்பினர் வாதிட்டனர். மசூதி கமிட்டியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், "ஞானவாபி விவகாரத்தில் வழிபாட்டு தலங்கள் சட்டம் பொருந்தாது" என தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மசூதி கமிட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, "இந்த மனு, முதன்மை மனுவுடன் சேர்ந்து விசாரிக்கப்படும்" என தெரிவித்தது.
வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991இன்படி, "கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று, வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ, அதன்படியே தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது" என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, இந்த சட்டத்தை மீறி, ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.