”நாளைக்கு பதில் வேணும்..” : தேசத்துரோக வழக்கு பற்றிய மீள்பரிசீலனை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Sedition Law: தேசத்துரோக 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிரான மனுக்களை விசாரணை செய்வதைத் தவிர்க்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்த ஆலோசனையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசத்துரோக சட்டத்தின் பிரிவான 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிரான மனுக்களை விசாரணை செய்வதைத் தவிர்க்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்த ஆலோசனையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் நாளை வர கால அவகாசம் அளித்து, தேசத்துரோக வழக்கின் கீழ் குற்றம் சாட்டுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்தும், அதனால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பாதுகாக்கப்படுவது குறித்தும் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
`அரசிடம் இருந்து விதிமுறைகளைப் பெறுவதற்கு நாளை காலை வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம். நிலுவையில் உள்ள வழக்குகளும், எதிர்கால வழக்குகளும் எங்கள் கவனத்தில் இருக்கின்றன. இந்தச் சட்டத்தை மீள்பரிசோதனை செய்யும் வரை இவர்களை அரசு எவ்வாறு நடத்தும் என்பது தெரிய வேண்டும்’ என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
தேசத்துரோக சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூடுதலாக நேரம் கேட்ட போது, கோபத்தை வெளிப்படுத்திய நீதிமன்றம், `மறுபரிசீலனை செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நாம் அவ்வாறு பொறுப்பின்றி செயல்பட முடியாது. எவ்வளவு நேரம் தேவை என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். யாராவது சிறையில் பல மாதங்கள் இருக்க முடியுமா? உங்கள் மனுவில் குடிமக்களின் சுதந்திரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது? அதனை எப்படி பாதுகாப்பீர்கள்?’ என சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், `இந்த சட்டத்தை மாற்றுவது அவர்களின் விருப்பம். ஆனால் நாங்கள் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளோம். இதில் முடிவு எடுக்க வேண்டியது நிர்வாகமும், சட்டமன்றமும் ஆகும். ஆனால் நாங்கள் நீதிமன்றமும் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம். இவர்கள் சட்டத்தையே மாற்றினாலும், தற்போது நிலுவை இதே வழக்கில் பல்வேறு விசாரணைகளும், கைதுகள் இருக்கின்றன. அவை மீதான நடவடிக்கையும் மாற்றப்படக்கூடிய சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்’ என வாதாடியுள்ளார்.
கடந்த மே 7 அன்று தேசத்துரோக வழக்கிற்கு ஆதரவாக கடும் வாதங்களை முன்வைத்த மத்திய அரசு, கடந்த மே 9 அன்று அந்தச் சட்டத்தை மீள்பரிசீலனை மேற்கொள்வதாக முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், மத்திய அரசு தேர்ந்த குழுவின் உதவியோடு, தேசத்துரோக வழக்கு குறித்து மீள்பரிசீலனை மேற்கொண்டு, அதனைப் பயன்படுத்துவது குறித்த முடிவுகளை மேற்கொள்வதற்காகத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. அதனோடு, இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்படும் மனுக்களை விசாரிக்க நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.