மணீஷ் சிசோடியாவுக்கு பிணை மறுப்பு.. உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த மே 30ஆம் தேதி, அவருக்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.
சிறையில் சிக்கி தவிக்கும் மணீஷ் சிசோடியா:
தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது. இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சிசோடியாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த மே 30ஆம் தேதி, அவருக்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த ஜூலை 3ஆம் தேதி, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில், பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு:
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த நிலையில், பிணை கோரி தொடரப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 338 கோடி ரூபாய் பண மோசடி நடந்திருப்பது உறுதியற்ற முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல, வழக்கின் விசாரணை 6 முதல் 8 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. விசாரணை மெதுவாக நடந்தால் மூன்று மாதங்களுக்குப் பிறகு சிசோடியா மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மற்றும் சில சட்ட கேள்விகளை மேற்கோள் காட்டியுள்ளோம். ஆனால், அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதில் அளிக்கவில்லை. விசாரணை செய்ததில் 338 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்திருப்பதில் சந்தேகத்திற்குரிய சில அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், பண பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியற்ற முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பிணை மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என நீதிபதி கண்ணா தெரிவித்துள்ளார்.
பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்கு சிசோடியா சிறையில்தான் இருக்க போகிறார். முந்தைய விசாரணையின்போது, "சிசோடியாவை காலவரையற்று சிறையில் அடைக்க முடியாது" என்றும் "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் வாதங்கள் தொடங்கப்படும்" என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.