”சாதிய பாகுபாட்டை களைய என்ன நடவடிக்கை எடுத்தீங்க?” ரோஹித் வெமுலா வழக்கை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றம் கேள்வி
"அதிகாரிகள் இந்த பிரச்னையை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்பை எந்த பெற்றோரும் சந்திக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் சாதிய பாகுபாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சாதிய பாகுபாட்டின் காரணமாக தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், ஐஐடி மும்பையில் நடந்த தலித் மாணவர் தற்கொலை பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியது.
உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு:
இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, சாதிய பாகுபாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றதில் இருந்து, சாதிய பிரச்னைக்கு எதிராக அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டை களைவதற்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு பல்கலைக்கழக மானிய குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று, தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா, பயல் தட்வி ஆகியோரின் தாயார்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
அந்த மனுவில், "அதிகாரிகள் இந்த பிரச்னையை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்பை எந்த பெற்றோரும் சந்திக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை அமல்படுத்துவதையும், பின்பற்றுவதையும் கண்டிப்பாக உறுதிசெய்ய ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டு கொள்கிறோம்.
தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதிய பிரச்னைகள்:
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்பட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடமிருந்து புகார்களைப் பெறவும் அதை தீர்த்து வைக்கவும் பிரத்யேக புகார் பிரிவை அமைக்க வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும்
பன்முகத்தன்மை மற்றும் இடஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றுமாறும், அதன்மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்க தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுக்கு (NAAC) நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பரவலாக உள்ளது என்று பேராசிரியர் சுக்தியோ தோரட் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, "பல்கலைக்கழக மானியக் குழு, ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் நடவடிக்கையின் போக்கை தீர்மானிக்கும் போது மனுதாரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்" என கேட்டு கொண்டது.
பட்டியலின மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வர பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள திட்டங்கள் என்னென்ன என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், "இந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பன்மடங்கு" என தெரிவித்தது.