Electoral Bonds : "அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குறது தொழில் நிறுவனங்களோட வேல இல்ல" உச்சநீதிமன்றம் காட்டம்
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடையை வெளிப்படைத்தன்மையாக மாற்ற தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
தேர்தல் பத்திர விவகாரம் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடையை வெளிப்படைத்தன்மையாக மாற்ற தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளதாகவும் வெளிப்படைத்தன்மையற்று இருப்பதாகவும் ஊழலை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?
கடந்த 2017ஆம் ஆண்டு, நிதிநிலை அறிக்கையின்போது, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இத்திட்டத்தை அறிவித்தார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகளில் இருந்து தேர்தல் பத்திரங்களை பெற்ற அதன் மூலம் நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரம் வழிவகுத்தது.
1000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் ஆகிய விலைகளில் இந்த பத்திரங்கள் விற்கப்படுகின்றன. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த பத்திரத்தை வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். தனிநபரோ அல்லது நிறுவனமோ, தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கலாம். அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரத்தை நிதியாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்.
இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், யார், யாருக்கு நன்கொடை அளிக்கிறார் என்ற விவரம் பொதுவெளியில் வெளியிடப்படாது. எனவே, பெரு நிறுவனங்கள், தங்களுக்கு தோதான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்து, அக்கட்சி ஆட்சி அமைக்கும்போது, தங்களுக்கு தேவையான வேலைகளை செய்து முடித்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுகிறது.
தேர்தல் பத்திரத்துக்கு எதிரான வழக்கு:
தேர்தலில் நடைபெறும் ஊழலை தேர்தல் பத்திரம் சட்டபூர்வமாக்குவதாக கூறி, தேர்தல் பத்திரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, மூன்று பேர் விசாரித்து வந்த இந்த வழக்கு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை, தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை
இரண்டு வார காலத்துக்குள் சமர்பிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "அரசியல் கட்சிகளுக்கு செல்லும் நன்கொடையை ஒழுங்கப்படுத்துவே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. தேர்தலின்போது, கணக்கில் வராத பணம் பயன்படுத்துவதை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். தொழில் நிறுவனங்களின் வேலை என்பது, தொழில் செய்வதே தவிர, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அல்ல" என்றார்.