தன்பாலின திருமண விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்! உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாற்றப்படுமா?
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ஒப்பு கொண்டுள்ளது.
தன்பாலின திருமணத்தற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த வழக்கில் இரு நீதிபதிகள் ஒரே மாதிரியாகவும், மூன்று நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர்.
"அங்கீகாரம் வழங்குவது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது"
ஐந்து நீதிபதிகளும், ஒரே விஷயத்தில் மட்டும் ஒரு மித்த கருத்தை தெரிவித்திருந்தனர். திருமணத்தில் சமத்துவம் கொண்டு வர சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என குறிப்பிட்டிருந்தனர். ஆனால், திருமண உரிமை, தத்தெடுப்பு உரிமை ஆகியவற்றில் வேறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர்.
உறவை ஏற்படுத்தி கொள்ள பால்புதுமையினருக்கு (Queer) அடிப்படை உரிமை உள்ளது என்றும் அவர்கள் செய்து கொள்ளும் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது அரசின் கடமை என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் ஒரே விதமான தீர்ப்பை வழங்கினர்.
ஆனால், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த பெரும்பான்மை நீதிபதிகள், "தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது. இதில் பல அம்சங்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியிருப்பதால் நாடாளுமன்றத்தால் மட்டும்தான் சட்ட அங்கீகாரம் வழங்க முடியும்" என தெரிவித்தனர்.
தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தன்பாலின தம்பதிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தன்பாலின தம்பதிகளுக்கு பின்னடைவு:
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ஒப்புகொண்டுள்ளது.
வழக்கின் விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹித்கி மற்றும் மேனகா குருசாமி, வழக்கறிஞர்கள் அருந்ததி கட்ஜு மற்றும் கருணா நுண்டி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் ஏற்று கொண்டார்.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், "உண்மையான குடும்பத்தை போன்று மகிழ்ச்சியாக வாழ பால்புதுமையினர் விரும்பினர். ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மறைவான நேர்மையற்ற வாழ்க்கையை வாழ வேண்டிய நெருக்கடியில் அவர்களை தள்ளியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான எஸ். ரவீந்திர பட் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், மற்றொரு நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுல் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஓய்வுபெறுகிறார். இதனால், சீராய்வு மனுவை விசாரிக்கப்போகும் புதிய நீதிபதிகள் தீர்ப்பில் திருத்தம் மேற்கொள்வார்களா? அல்லது அதே தீர்ப்பை உறுதி செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.