எந்நாளும் மதுக்கடைகளுக்கு லாக்டவுன் போட்ட மாநிலங்கள் எவை தெரியுமா?
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் சில நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளனர். அந்தவகையில் தமிழ்நாட்டிலும் நேற்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலங்களில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் செயல்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.
தமிழ்நாட்டில் 14 நாட்கள் ஊரடங்கையே பொறுத்து கொள்ள முடியாமல் மதுப்பிரியர்கள் மிகவும் திணறி வருகின்றனர். இந்தச் சூழலில் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அவை எவை தெரியுமா? அங்கு பூரண மதுவிலக்குப் பிறகு மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததா?
குஜராத்:
இந்தியாவில் முதல் முறையாக பூரண மதுவிலக்கு கொள்கையை கடைப்பிடித்த மாநிலம் குஜராத் தான். காந்தி பிறந்த மாநிலம் என்பதால் அவருடைய தீவிர மதுவிலக்கு கொள்கையை 1961ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தியது குஜராத் மாநிலம். எனினும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன் படி குஜராத்தில் 5.8 சதவிகிதம் பேர் மது அருந்தி வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மதுவிலக்கு அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் குறைவாக மது குடிப்போர் உள்ள மாநிலம் இது தான்.
நாகாலாந்து:
நாகாலாந்து அரசு 1989ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கு கொள்கையை அம்மாநிலம் முழுவதும் அமல்படுத்தியது. இந்த மாநிலத்தில் அதன்பின்னர் சட்டவிரோத மது விற்பனை மிகவும் சூடுபிடித்துள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன் படி இங்கு 23.8 சதவிகிதம் பேர் இன்னும் மது அருந்தி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லச்சத்தீவு:
இந்தியாவில் பூரண மதுவிலக்கு கடைப்பிடிக்கும் ஒரே யூனியம் பிரதேசம் லச்சத்தீவு தான். இங்கு பங்காரம் என்ற தீவு தவிர மற்ற இடங்களில் மது அருந்துவது மற்றும் விற்பது சட்டபடி குற்றமாகும். இந்த ஆணையை மத்திய அரசு 1979ஆம் ஆண்டு அறிவித்தது. அதன்பின்னர் இங்கு இருக்கும் மக்களை இதை தீவிரமாக கடைப்பிடிக்கின்றனர். இந்தியாவில் மிகவும் குறைவாக மது குடிப்பவர்கள் பதிவானது இந்தப் பகுதியில் தான். தேசிய குடும்பநல சுகாதார கண்கெடுப்பு-5 தரவுகளின்படி இங்கு 0.4 சதவிகிதம் பேர் மட்டும் மது அருந்துகின்றனர்.
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தில் 1991ஆம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. எனினும் 2002ஆம் ஆண்டு அம்மாநில அரசு 5 மலைப்பகுதிகளிலுள்ள மாவட்டங்களில் மட்டும் இந்தத் தடைக்கு விலக்கு அளித்தது. இதன்பின்னர் இந்தியாவில் அதிகளவில் மது அருந்துபவர்கள் பட்டியலில் மணிப்பூர் மூன்றாவது இடத்தை பிடித்தது. தற்போது அங்கு மது விற்பனையை சட்டபடி ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் நலன் அமைப்புகள் தீவிர எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
பீகார்:
பீகார் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த தடையை விதித்தார். அதன்பின்னர் பீகாரில் சட்டவிரோத மது விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி அங்கு தற்போது 19 சதவிகிதம் பேர் வரை மது அருந்தி வருகின்றனர்.
மிசோரம்:
மிசோரம் மாநிலத்தில் 1997ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு இதனை காங்கிரஸ் அரசு விலக்கியது. இதனால் மிசோரம் மாநிலத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை மடமடவென அதிகரித்தது. 2019ஆம் ஆண்டு மீண்டும் பூரண மதுவிலக்கு கொள்கை அங்கு அமல்படுத்தப்பட்டது. தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு-5 தரவுகளின்படி அங்கு தற்போது 24 சதவிகிதம் பேர் மது அருந்தி வருகின்றனர்.
இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது பூரண மதுவிலக்கு கொள்கையை அரசுகள் அமல்படுத்தினாலும் அவற்றை குடிப்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று தெரியவருகிறது. எனவே உடலுக்கு மிகவும் தீங்கான மது பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.