பஞ்சாப் விஷ வாயு கசிவுக்கு காரணம் என்ன..? விசாரணையில் இறங்கிய சிறப்பு புலனாய்வு குழு..!
நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை பஞ்சாப் காவல்துறை அமைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை பஞ்சாப் காவல்துறை அமைத்துள்ளது.
தொழில்நுட்பக் குழு அமைப்பு:
இதுகுறித்து காவல்துறை ஆணையர் மந்தீப் சிங் சித்து கூறுகையில், "மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஐந்து பேர் கொண்ட தனி சிறப்பு புலனாய்வு குழு
காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் எந்த விதமான இழப்பும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, அலட்சியம் செய்ய மாட்டோம்" என்றார்.
பஞ்சாப் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஒரு தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொழிற்சாலை கழிவுகளை அகற்றுவது எப்படி என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.
இதுதொடர்பாக பேசிய லூதியானா மேற்கு சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சுவாதி, "நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் நாங்கள் வாயு அளவைக் கண்காணித்து வருகிறோம். பஞ்சாப் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உயிரிழப்பு:
இது இங்குள்ள அனைத்து தொழில்துறையின் கழிவுகளை அகற்றுவதை ஆய்வு செய்யும். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10 வயது மற்றும் 13 வயதுடைய 2 ஆண் குழந்தைகள் உட்பட ஐந்து பெண்களும் ஆறு ஆண்களும் உயிரிழந்தனர்.
விஷ வாயு கசிந்து 11 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார்.
"லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. போலீஸ், அரசு மற்றும் NDRF குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் மற்ற விவரங்கள் வெளியிடப்படும்" என பஞ்சாப் முதலமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக அறிவித்தார்.
பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்ட், குளிரூட்டும் அமைப்பிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டது. தொழிற்சாலை அருகே வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் மயங்கி விழுந்துள்ளதாகவும், தற்போது அந்த பகுதிக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் அங்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. மூன்று குழந்தைகளுடன் ஒரு தம்பதியினர் கிளினிக்கில் இறந்து கிடந்தனர்.