Rahul Gandhi Marriage: "நீங்க ஏன் என் பையனுக்கு ஒரு நல்ல பொண்ண பாக்க கூடாது?" மூதாட்டியிடம் உரிமையுடன் கேட்ட சோனியா காந்தி
மூதாட்டி ஒருவர் ராகுல் காந்தியின் திருமணம் குறித்து சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பியதும், அதற்கு சோனியாகாந்தி கலகலப்பான பதிலளித்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூலை 8ஆம் தேதி, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகளை சந்தித்து, ராகுல் காந்தி உரையாடல் நடத்தியிருந்தார். விவசாயிகள், ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. உரையாடலின்போது, பிரியங்கா காந்தி வீட்டுக்கு உணவு உண்ண வரும்படி பெண் விவசாயிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.
"என் பையனுக்கு ஒரு பொன்ன பாருங்க"
இந்த அழைப்பின் பேரில், டெல்லிக்கு சென்ற அந்த பெண்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தனர். அப்போது, அதில் ஒரு பெண், ராகுல் காந்தியின் திருமணம் குறித்து சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "நீங்க ஏன் என் பையனுக்கு ஒரு பொருத்தமான பொண்ண பாக்க கூடாது?" என பதில் கேள்வி எழுப்பினார்.
இந்த உரையாடல் அடங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, "அம்மாவும் பிரியங்காவும் நானும் சிறப்பு விருந்தினர்கள் சிலரை சந்தித்தோம். மறக்க முடியாத நாளாக இருந்தது. சோனிபட் விவசாய சகோதரிகள் டெல்லிக்கு வந்திருந்தார்கள். பரிசுகளை கொண்டு வந்திருந்தார்கள்.
நீண்ட நேரம் வேடிக்கையாக பேசி கொண்டிருந்தோம். விலைமதிப்பற்ற பரிசுகளை அவர்களிடம் இருந்து பெற்றோம். உள்ளூர் நெய், லஸ்ஸி, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாயுடன் நிறைய அன்பையும் கொடுத்தார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா மூதாட்டியிடம் சோனியா காந்தி கலகல:
இந்த வீடியோ வெளியான ஒரு மணி நேரத்திற்குள், இன்ஸ்டாகிராமில் சுமார் 500,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. நிறைய பயனாளர்கள், சுவாரஸ்யமான கருத்துக்களை வீடியோவில் கமெண்ட் செய்திருந்தனர். அதில் ஒருவர், "அவர் சாதாரண மக்களின் உண்மையான தோழர். மேலும் அவர் அதை 2024 இல் வென்று காட்டுவார் என்று தெரிகிறது" என கமெண்ட் செய்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்த நிலையில், கட்சியை மீட்டெக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி மாதம், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறைவு செய்தார்.
நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தேர்தலை முன்னிட்டு உணவை டெலிவரி செய்யும் நபருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். கடந்த மே மாதம், ஹரியானா மாநிலம் அம்பாலாவுக்கு லாரி டிரைவர்களுடன் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கடந்த மாதம், டெல்லியில் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் கடைக்கு சென்றார். அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.