பள்ளி புத்தக அட்டையில் அரசியலமைப்பு...மிஸ்ஸான இரண்டு வார்த்தைகள்...தெலங்கானாவில் வெடித்த சர்ச்சை..!
பள்ளி புத்தகத்தின் அட்டையில் அரசியலமைப்பின் முகப்புரை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகள் அச்சிடப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
சமீப காலமாக, பள்ளி பாடத்திட்டங்களில் இடம்பெறும் கருத்துகள் சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. கர்நாடகாவில் பள்ளி வரலாற்று பாடத்திட்டத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (பாஜகவின் சித்தாந்த வழிகாட்டி) நிறுவனர்களில் ஒருவரான கே.பி. ஹெட்கேவார் மற்றும் வி.டி. சாவர்க்கர் ஆகியோர் பற்றிய அத்தியாயங்கள் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கடந்தாண்டு பாஜக ஆட்சியில் இருந்த காலத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாற்றங்களை, கடந்த மாதம் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றது.
பள்ளி புத்தகத்தின் அட்டையில் அரசியலமைப்பின் முகப்புரை:
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தெலங்கானாவில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பள்ளி புத்தகத்தின் அட்டையில் அரசியலமைப்பின் முகப்புரை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் இரண்டு வார்த்தைகள் அச்சிடப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 'socialist' (சமதர்மம்) மற்றும் 'secular' (மதச்சார்பின்மை) ஆகிய வார்த்தைகள் இல்லாமல் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் அச்சிடப்பட்டதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்தான், இந்த புத்தகத்தை தயார் செய்துள்ளது. இந்த சம்பவம் தெரிய வந்ததை தொடர்ந்து, மாநில கல்வித்துறையிடம் தெலங்கானா மாநில ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது. அதில், "தவிர்க்கப்பட்ட இரண்டு வார்த்தைகள் 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டவை. புத்தகத்தின் அட்டையில் மட்டுமே தவறாக வெளியிடப்பட்டது. ஆனால், 8 மற்றும் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகங்களில் உள்ளே இருக்கும் பக்கங்களில் 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் உள்பட முகப்புரை சரியாக வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் சர்ச்சை:
குறிப்பாக, இந்தியாவில் மதச்சார்பின்மையின் நிலை குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், முகப்புரையின் பழைய பதிப்பை வெளியிடுவது குறித்த கவலைகள் எழுந்துள்ளது. இது சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. இது மிகப் பெரிய பிழையாகும். ஒன்று வேண்டுமென்றே நடந்திருக்க வேண்டும் அல்லது மேற்பார்வையின் காரணமாக நடந்திருக்கலாம்.
சரியான முகப்புரையை வெளியிட வேண்டும். விசாரணை நடத்தி முகப்புரையை தவறாக வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதற்கு விளக்கம் அளித்துள்ள தெலங்கானா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், "இந்த தவறு கவனக்குறைவின் காரணமாக நடந்துள்ளது. புத்தகத்தின் அட்டையை வடிவமைக்கும்போது புகைப்படத்தை பதவிறக்கம் செய்யும்போது இது தற்செயலாக நடந்துள்ளது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (DEOs) அதன் மூலம் அளிக்கப்பட்ட முகவுரையின் (திருத்தப்பட்ட) படத்தைப் பதிவிறக்கம் செய்து, 10ஆம் வகுப்பு சமூகப் பாடப் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் ஒட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.