"வயநாட்டுக்கு போகாமா போட்டி போடட்டும்" ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஸ்மிருதி இராணி
நடப்பாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி, எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவது அமேதி தொகுதி. உத்தர பிரசேதத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் (இடைத்தேர்தல் உள்பட) 13 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
நேரு குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா ராகுல் காந்தி?
குறிப்பாக ராகுல் காந்தி கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக பதவி வகித்தார். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2019ஆம் ஆண்டு அமேதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
வயநாட்டில் வெற்றி பெற்ற போதிலும் அமேதியில் பா.ஜ.க.வின் ஸ்மிருதி இராணியிடம் 55 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் (தற்போது மத்திய அமைச்சர்) தோல்வி அடைந்தார். ராகுல் காந்தியால் 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இந்த சூழலில், வரவிருக்கும் தேர்தலில் ராகுல் காந்தி, எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அரசியல் பரபரப்புக்கு மத்தியில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. அமேதி தொகுதியில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார்.
சவால் விட்ட ஸ்மிருதி இராணி:
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்ட அதே நாளில், ஸ்மிருதி இராணியும் அமேதியில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார். நம்பிக்கை இருந்தால் வயநாட்டுக்கு செல்லாமல் அமேதி தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்மிருதி இராணி கூறுகையில், "2019இல் அமேதியை விட்டு ராகுல் காந்தி வெளியேறிவிட்டார். இன்று அமேதி அவரை விட்டு விலகிவிட்டது. தன்னம்பிக்கை இருந்தால் வயநாடு போகாமல், அமேதி தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும். அமேதியின் காலியான சாலைகள், ராகுல் காந்தியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நமக்குத் தெரிவிக்கிறது" என்றார்.
கடந்த சில மாதங்களாகவே, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு உள்ளதால், அவரின் பாரம்பரிய தொகுதியான ரே பரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: "குடும்பத்திற்காக அதிகாரம் பெற நினைப்பவர்கள் ஏழைகள் பற்றி யோசிப்பார்களா?" அமித்ஷா கேள்வி