பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு... சிக்கிய மாஸ்டர்மைண்ட்!
சித்து மூஸ் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் தான் மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல் துறை தற்போது தெரிவித்துள்ளது.
பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரது கும்பல் முதலில் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார்.
பழிவாங்கல் நடவடிக்கை?
எனினும் காவல் துறை விசாரணையில் அவர் கொலைக்கு பொறுப்பேற்க மறுத்ததாகவும், அகாலி தளம் கட்சியின் இளைஞரணித் தலைவர் விக்ரம்ஜித் சிங் என்ற விக்கி மிட்டுகேராவைக் கொன்றதில் மூஸ் வாலாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், சித்துவின் கொலை அதற்கான பழிவாங்கல் நடவடிக்கையே என பிஷ்னோய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மாஸ்டர்மைண்ட்
இந்நிலையில், சித்து மூஸ் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் தான் மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல் துறை தற்போது தெரிவித்துள்ளது.
மேலும் இக்கொலையை ’கேங் வார்’ காரணமாக நடந்தேறிய படுகொலை என்று காவல் துறை முன்னதாகக் கருதிய நிலையில், இப்போது அதையும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலைக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இப்போதைய சூழலில் கூடுதல் தகவல்களைக் கூற முடியாது என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாடகர், அரசியல் தலைவர்
28 வயது நிரம்பிய பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்து மூஸ்வாலா, தன் பாடல்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளால் பெரிதும் பேசப்பட்டவர்.
பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல சித்து மூஸ்வாலா, கடந்த மே.29ஆம் தேதி மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அவர் உயிரிழந்த செய்தியை மான்சா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ரஞ்சீத் ராய் உறுதிப்படுத்தினார்.
விசாரணை கமிஷன்
முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உட்பட 420க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது. பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த அனைவருக்கும் ஜூன் 7ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சித்து மூஸ் வாலாவின் மறைவு குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் சண்டிகர் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைத்தும் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்