CM Stalin Accepts Invite : கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா - அழைப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Karnataka CM Swearing-In: கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு செல்கிறார்.
கர்நாடகா பதவியேற்பு விழா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு:
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார். கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா வரும் சனிக்கிழமை (20.05.2023) பதவியேற்கிறார். இதற்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.
கர்நாடக தேர்தல்:
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியது. காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்தது. கடந்த 10- ம் (10,மே,2023) தேதி கர்நாடக மாநில தேர்தல் நடைபெற்றது. 13ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135, பாஜக 66, மதசார்பற்ற ஜனதா தளம் 19, மற்றவை 4 தொகுதகளில் வெற்றி பெற்றிருந்தது. தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், முதல்வர் பதவியை பிடிப்பதில், காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது.இப்படி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, நேற்று ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசியிருந்தனர்.
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு
மாநில முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளது யார் என்ற போட்டி நிலவிய நிலையில், சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ”கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர்.
தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால் முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. வரும் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூருவில் நடைபெறும். அன்றைய தினம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் மற்ற அமைச்சர்களும் பதவியேற்பார்கள்." என்று தெரிவித்தார்.
மக்களின் நலனுக்கு முன்னுரிமை - டி.கே.சிவக்குமார் டிவீட்
துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கதில், “கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்களுக்கு முதன்மையானது; முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது; அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைசச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் வெற்றிக்கு முதலமைச்சர் வாழ்த்து:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!” என பதிவிட்டிருந்தார்.