I.N.D.I.A. கூட்டணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவா? உத்தவ் தாக்கரே சிவசேனா போட்ட ஸ்கெட்ச்
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக ராகுல் காந்தி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சி ஆதரவு கோரியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் 280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
இந்த சூழலில், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்ற INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வுருகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணியின் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாம் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மூன்றாம் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் நடைபெற்றது.
அதிரடி காட்டும் INDIA கூட்டணி:
கூட்டணி சார்பில் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் வியூக குழு, தேர்தல் பிரச்சார குழு, ஊடக குழு என தனித்தனியே கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சி ஆதரவு கோரியுள்ளது.
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக INDIA கூட்டணிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விஜயதசமியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர், "இந்தியா முன்னேற வேண்டும் என்று விரும்பாத சிலர் உலகிலும் இந்தியாவிலும் உள்ளனர். சமூகத்தில் பிளவுகளையும் மோதல்களையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "மோகன் பகவத், இதை எதிர்க்கட்சிகளை நோக்கி சுட்டிக்காட்ட முயல்கிறார் என்றால், நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு INDIA கூட்டணியில் சேரும் முதல் நபராக அவர் இருக்க வேண்டும்" என்றார்.
உத்தவ் தாக்கரே சிவசேனா போட்ட ஸ்கெட்ச்:
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பல்வேறு சித்தாந்தங்களைச் சுமந்தவர்கள் INDIA கூட்டணிக்குள் வந்து, சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராட முனைந்தால், மோகன் பகவத் (RSS தலைவர்) தேசத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற INDIA கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
எமர்ஜென்சி காலத்தில் அன்றைய சங்பரிவார் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பலதரப்பட்ட கருத்துக்கள் கொண்டவர்கள் சிறையில் இருந்தார்கள். பின்னர், அவர்கள் பாரதிய ஜனதாவுடன் இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கி சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இது உங்களுக்குத் தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளுங்கள். எல்.கே. அத்வானி இன்னும் உயிருடன் இருக்கிறார். அவரும் சிறையில் இருந்தார். வாஜ்பாய், சிறைக்கு அனுப்பப்பட்டார். ஜெய்பிரகாஷ் நாராயண் உட்பட அவருடன் பல்வேறு கருத்துகளைக் கொண்டவர்கள் அவருடன் சிறையில் இருந்தார்கள். இது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம் என்பதை மோகன் பகவத்திடம் சொல்ல வேண்டும்" என்றார்.