"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
இந்தியா கூட்டணியின் தலைவராக மம்தா பானர்ஜி காய்களை நகர்த்தி வருகிறார். அதற்கு, இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் பவார் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கூட்டணியை வழிநடத்த தயாராக இருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் பவார் ஆதரவு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலை திருப்பிப்போட்டது. 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என சொல்லி வந்த பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சி அமைத்தது.
காங்கிரஸ்-க்கு ஷாக்:
இதை தொடர்ந்து, அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணியும் ஹரியானாவில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவும் வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீர், ஹரியானாவை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்டில் படுதோல்வி அடைந்த போதிலும், மகாாஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
மக்களவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டெழுந்துள்ளதாக அதன் தலைவர்கள் சொல்லி வந்தாலும், பாஜகவுக்கு எதிரான நேரடி போட்டியில் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த சூழலில், மேற்கு வங்க முதலமைச்சராக பதவி வகிக்கும் அதே சமயத்தில் எதிர்க்கட்சி கூட்டணியை (இந்தியா) தன்னால் வழிநடத்த முடியும் என மம்தா பானர்ஜி கூறி இருந்தார்.
மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி?
இந்த நிலையில், மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார் பேசியுள்ளார். கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அவர் நாட்டின் ஒரு திறமையான தலைவர். அதை சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அவர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய எம்பிக்கள் கடின உழைப்பாளிகள். அனைவரும் விழிப்பாக செயல்படுகின்றனர்" என்றார்.
ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ள நிலையில், காங்கிரஸ் மீது பல்வேறு மாநில கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இம்மாதிரியான சூழலில், மம்தா தெரிவித்த கருத்தும் அதற்கு சரத் பவார் ஆதரவு தெரிவித்திருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?