எருமை மாடு என்னுது...! போட்டி போட்டுக்கொண்ட உரிமையாளர்கள் - போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!
புகாரளித்த சந்திரபால் காஷ்யப் திருடப்பட்டதாக கூறப்படும் எருமையின் தாய் மாடு தன்னிடம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன எருமை மாட்டுக்கு இருவர் சொந்தம் கொண்டாடியதால் உண்மையை கண்டறிய அம்மாவட்ட போலீசார் வித்தியாசமான முயற்சியை கையிலெடுத்துள்ளனர்.
பொதுவாக கால்நடைகள் காணாமல் போவதும், திருடப்படுவதும் வழக்கமான ஒன்று என்றாலும் இது தொடர்பான புகார்களில் அதனை கண்டுபிடிக்க போலீசார் படும் பாடு நிச்சயம் சொல்லி மாளாது. பலராலும் இது வேடிக்கையான விஷயமாக பார்க்கப்பட்டாலும் சிரமம் எடுத்து காவல்துறை கண்டுபிடித்தும் சில நேரங்களில் பிரச்சினை வேறு வடிவத்தில் வந்து அவர்களுக்கே தலைவலியாக அமையும். அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள ஷாம்லி மாவட்டத்தின் ஜின்ஜானா காவல் நிலையத்திற்குட்பட்ட அகமதுகர் கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சந்திரபால் காஷ்யப் என்ற தொழிலாளி தனது மாட்டுத் தொழுவத்தில் இருந்து மூன்று வயது ஆண் எருமை மாடு திருடப்பட்டதாக போனதாக காவல்துறையில் புகாரளித்தார். இதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நவம்பர் மாதம் சஹாரன்பூரில் உள்ள பீன்பூர் கிராமத்தில் சத்பீர் சிங் என்பவருக்கு சொந்தமான இடத்தில் திருடப்பட்டதாக கூறப்படும் எருமை மாட்டை கண்டுபிடித்தனர்.
உண்மையை கண்டறிய சந்திரபாலிடம் மாட்டை காட்டிய போது அவர் சில அடையாளங்களை காட்டி தன்னுடையது தான் என வாதிட்டார். அதாவது மனிதர்களைப் போலவே விலங்குகளும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளதாக கூறும் சந்திரபால் அதன் இடது காலில் ஒரு தழும்பு உள்ளது என கூறியுள்ளார். மேலும் வால் முனையில் ஒரு வெள்ளைத் திட்டு உள்ளது. அதேபோல் நான் அருகில் சென்றபோது என்னை அடையாளம் கண்டுகொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த மாடு தனக்கு சொந்தம் என சத்பீர் சிங் தெரிவித்து அதனை போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். இதனால் போலீசாருக்கு இந்த விவகாரத்தில் யார் உரிமையாளர் என்பதை கண்டறிவதில் தலைவலி உருவானது. அதற்குள் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்த பிரச்சினை முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ள இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய போலீசார் வித்தியாசமான முடிவு ஒன்றை கையிலெடுத்துள்ளனர்.
அதாவது புகாரளித்த சந்திரபால் காஷ்யப் திருடப்பட்டதாக கூறப்படும் எருமையின் தாய் மாடு தன்னிடம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஷாம்லி எஸ்.பி., சுக்ரிதி மாதவ் தாய் மற்றும் குட்டி ஆகியவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை பரிசோதனை செய்து உரிமையாளரை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்