Gender Ratio | 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள்.. சுதந்திர இந்தியாவின் ஒரு மைல்கல் வெற்றி..
இந்தியாவில் மட்டும் 46 மில்லியன் (4 கோடி 60 லட்சம்) பெண்கள் காணாமால் (Missing Woman) போய்விட்டதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவித்து வந்தன
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் என்ற மேம்பட்ட பாலின விகிதத்தை இந்தியா கண்டுள்ளது.
இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்க நிலவுடைமை சமூக கட்டமைப்பு காரணமாக பெண் குழந்தைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்தனர். 1000 ஆண்களுக்கு 850 முதல் 900 பெண்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். பெண் சிசுக்களை கொல்வது, பெண் குழந்தைகளும் பிறப்பதை உறுதி செய்யாமல் பார்த்துக்கொள்வது போன்ற காரணங்களால் இந்தியாவில் மட்டும் 46 மில்லியன் (4 கோடி 60 லட்சம்) பெண்கள் காணாமால் (Missing Woman) போய்விட்டதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக பாலின விகிதம் சமநிலையைத் தாண்டி, பெண்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருக்கிறார்கள். முக்கிய அம்சமாக, நகர்ப்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் பாலின சமத்துவநிலை அதிகம் காணப்படுகிறது.
2019-21-ன் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ்) 5-ன் இரண்டாம் கட்ட முடிவுகளை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் குமார் பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் ஆகியோர் புதுதில்லியில் நேற்று வெளியிட்டனர். இந்த சுகாதார ஆய்வு, இரண்டு கட்டங்களாக (2019,2021) 707 மாவட்டங்களில் உள்ள 650,000 குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் கணக்கெடுக்கும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.
அருணாச்சலப்பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், டெல்லி ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் தொகை, மகப்பேறு, சிறார் சுகாதாரம், குடும்ப நலன், ஊட்டச்சத்து உள்ளிட்ட முக்கிய குறியீடுகளின் தகவல் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
குழந்தைகள் இறப்பு:
Thread #NFHS5 data has been released for TN
— Yazhini PM (@yazhini_pm) November 25, 2021
Neonatal Mortality rate down to 12.7
Infant Mortality rate down to 18.6
Under 5 mortality rate down to 22.3
C-sections increased to 44.9
ANC visits inc to 77.4%
Vaccination in pregnant women increased to 89.4%#DravidianModel pic.twitter.com/tGK9nkVfKr
பச்சிளங்குழந்தைகளின் (பிறந்து ஒரு மாதம் முடிவதற்குள்) இறப்பு விகிதத்தில் 4.6 (2015-16 தரவுகளோடு ஒப்பிடுகையில்) விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. அதேபோன்று, ஒரு மாதம் முதல் 59 மாதங்கள் வயது வரை உள்ள குழந்தைகள் மத்தியில் 5.5 விழுக்காடு குறைந்திருக்கிறது. இந்தச் சரிவு 2005 முதல் தொடங்கி, 2010, மற்றும் 2015-க்குள் அதிக வளர்ச்சி பெற்றிருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் இந்த விழுக்காடு 7.8-ஆக குறைந்துள்ளது.
ஏறக்குறைய 6 மில்லியன் (60 லட்சம்) குழந்தைகள் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றன. ஐந்தில் ஒரு இறப்பு இந்தியாவில்தான் நடக்கிறது (2015-ல் 1.2 மில்லியன் (12 லட்சம்)) என்பதால், அந்த எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் இந்தியாவையே சார்ந்திருக்கிறது. 2000 முதல் 2015-வரை மொத்தம் 29 மில்லியன் (2.9 கோடி) குழந்தைகள் இந்தியாவில் இறந்திருக்கின்றனர். இறப்பு வீதம் தொடர்ந்து 2000 த்திலிருந்து மாறாமல் இருந்திருந்தால், மொத்தம் சுமார 39 மில்லியன் குழந்தைகள் இறந்திருப்பார்கள்
கருத்தரித்தல் விகிதம்: இந்த முயற்சிகள் மூலம், மக்கள்தொகைக்கு இணையான அளவுக்கு பெண்களுக்கு குழந்தைப்பேறு ஏற்படும் அளவு (replacement fertility level - 2.1) 2.2-லிருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. கணக்கெடுப்பு 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த போக்கு காணப்படுகிறது.
அகில இந்திய அளவில் மருத்துவமனையில் மகப்பேறு விகிதம் கணிசமாக 79 சதவீதத்திலிருந்து 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இது 100 சதவீதமாக உள்ளது. இரண்டாம் கட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7-ல் இந்த விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
அகில இந்திய அளவில் 6 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தல் 2015-16-ல் 55 சதவீதம் என்பதிலிருந்து 2019-21-ல் 64 சதவீதமாக மேம்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்