தெலங்கானாவில் அமைச்சராக பதவியேற்ற முன்னாள் மாவோயிஸ்ட்! யார் இந்த சீதாக்கா?
ஆயதம் ஏந்திய மாவோயிஸ்டாக இருந்து வந்த சீதாக்கா, ஜனநாயக பாதையை தேர்வு செய்து, இன்று தெலங்கானா மாநிலத்தின் அமைச்சராக உயர்ந்துள்ளார்.
ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக இருப்பது தேர்தல். இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட நமது அரசியலமைப்பு வாய்ப்பு வழங்குகிறது. இதற்கு, வயது வரம்பு மட்டுமே தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல சாதனைகளை படைத்து வரும் இந்திய ஜனநாயகம், மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட் அமைச்சரான கதை:
ஆயதம் ஏந்திய மாவோயிஸ்டாக இருந்து வந்த ஒருவர், ஜனநாயக பாதையை தேர்வு செய்து, இன்று தெலங்கானா மாநிலத்தின் அமைச்சராக உயர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனுசுயா என்ற சீதாக்கா, ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டாக இருந்தவர். பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்.
யார் இந்த சீதாக்கா?
சத்தீஸ்கரின் எல்லையான முலுகுவில் உள்ள ஜக்கண்ணபேட்டாவில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலேயே மாவோயிஸ்ட்களால் உத்வேகம் பெற்றவர். தனது இளம் வயது அனுபவங்களை பகிரந்து கொண்ட சீதாக்கா, "80களில், மாவோயிஸ்ட்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றவராக இருந்தனர். நிலப்பிரபுக்களின் அடக்குமுறையால் துன்பத்தை அனுபவித்த பழங்குடிகள் மத்தியில் அவர்களுக்கு நல்ல பெயர் இருந்தது. எனவே, முலுகு பகுதியில் பழங்குடியினர் ஆயுதக் குழுவில் இணைவது வழக்கமான ஒன்று" என்றார்.
10 ஆம் வகுப்பு முடித்த பிறகு, 1988இல் சிபிஐ (எம்எல்) ஜனசக்தி கட்சியில் சீதாக்கா சேர்ந்தார். வர்க்க, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஜனசக்தி கட்சி உடைந்ததை தொடர்ந்து, கடந்த 1997 இல், ஆயுதங்களைக் கைவிட்டு, அரசின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சீதாக்கா.
சீதாக்கா கடந்து வந்த பாதை:
மூன்று மாத சிறைவாசத்திற்குப் பிறகு, ஹைதராபாத்தில் பழங்குடி மக்களுக்காக பணிபுரியும் அரசு சாரா அமைப்பான (என்ஜிஓ) யக்சியில் சீதாக்கா இணைந்தார். அரசு சாரா அமைப்பில் பணியாற்றி கொண்டிருந்தபோதே, ஹைதராபாத்தில் உள்ள பாதலா ராம ரெட்டி சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்த சீதாக்கா. அதன் பிறகு வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றினார்.
கணிசமான பழங்குடி மக்கள்தொகை கொண்ட அடிலாபாத் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் பரவலாக பயணம் செய்தார். பழங்குடிகளின் இணைந்து பணியாற்றிய சீதாக்கா, அவர்களுக்கு பழங்குடி தொடர்பான மக்கள் வாழ்வியல் ஆராய்ச்சியில் பயிற்சி அளித்தார். பழங்குடி மக்களுக்காக பணியாற்றி கொண்டிருந்தபோது, தெலுங்கு தேச கட்சியினருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட விரும்பிய அவர், 2004இல் முலுகு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், தோல்வி அடைந்தார். 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ், இப்போது பிஆர்எஸ்) ஆட்சியை கைப்பற்றியது. 2014இல் அவர் மீண்டும் தோற்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில், டிஆர்எஸ் 88 இடங்களில் வெற்றி பெற்றாலும் சீதாக்காவை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை. சமீபத்தில்தான், சீதாக்கா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இச்சூழலில், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார்.