3 லட்சம் கோடி சொத்து.. சிவ நாடாரை ஓவர்டேக் செய்த இந்தியாவின் பணக்கார பெண்.. யார் இவர்?
இந்தியாவின் பணக்கார பெண்ணாக உருவெடுத்துள்ளார் ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி தேவி ஜிண்டால். ஹரியானா மாநிலத்தின் எம்.எல்.ஏவாக உள்ள இவரின் சொத்து மதிப்பு 35.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3 லட்சம் கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது.

Forbes Billionaire List 2025: ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி தேவி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்ணாக உருவெடுத்துள்ளார். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2025ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் சாவித்ரி தேவி ஜிண்டால். ஹரியானா மாநிலத்தின் எம்.எல்.ஏவாக உள்ள இவரின் சொத்து மதிப்பு 35.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3 லட்சம் கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது.
யார் இந்த சாவித்ரி தேவி ஜிண்டால்?
2025ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் 10 பணக்காரர்களில் ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி தேவி ஜிண்டால்.
முதல் இடத்தில் முகேஷ் அம்பானியும் இரண்டாவது இடத்தில் கவுதம் அதானியும் உள்ள நிலையில், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சாவித்ரி தேவி ஜிண்டால் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
ஸ்டீல், மின்சாரம், சிமென்ட் மற்றும் உள்கட்டமைப்பு என பல துறைகளில் கால் பதித்து பிசினஸில் கொடி கட்டி பறந்து வருகிறது ஜிண்டால் குழுமம். இந்த நிறுவனத்தை சாவித்ரி தேவியின் மறைந்த கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் தொடங்கினார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு, அவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, வணிகம் அவர்களின் நான்கு மகன்களுக்கு இடையே பிரிக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த அவரது மகன் சஜ்ஜன் ஜிண்டால், JSW ஸ்டீல், JSW சிமென்ட் மற்றும் JSW பெயிண்ட்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, JSW இன்ஃப்ராஸ்ட்ரக்சரையும் கைப்பற்றினார். கடந்த 2024 ஆம் ஆண்டு, SAIC மோட்டர் நிறுவனத்தின் (சீனாவை சேர்ந்த நிறுவனம்) துணை நிறுவனமான MG மோட்டார் நிறுவனத்தில் 35 சதவீத பங்குகளை வாங்கி மின்சார வாகன உற்பத்தியிலும் கால் பதித்தார். டெல்லியை சேர்ந்த நவீன் ஜிண்டால், ஜிண்டால் ஸ்டீல் & பவரை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்?
- முகேஷ் அம்பானி - $92.5 பில்லியன் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்)
- கவுதம் அதானி - $56.3 பில்லியன் (அதானி குழுமம்)
- சாவித்ரி ஜிண்டால் - $35.5 பில்லியன் (OP ஜிண்டால் குழுமம்)
- சிவ் நாடார் - $34.5 பில்லியன் (HCL டெக்னாலஜிஸ்)
- திலீப் ஷாங்வி - $24.9 பில்லியன் (சன் பார்மாசூட்டிகல்ஸ்)
- சைரஸ் பூனவல்லா - $23.1 பில்லியன் (சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா)
- குமார் பிர்லா - $20.9 பில்லியன் (ஆதித்ய பிர்லா குழுமம்)
- லட்சுமி மிட்டல் - $19.2 பில்லியன் (ஆர்செலர் மிட்டல்)
- ராதாகிஷன் தமானி - $15.4 பில்லியன் (டிமார்ட், முதலீடுகள்)
- குஷால் பால் சிங் - $14.5 பில்லியன் (ரியல் எஸ்டேட்)





















