Savarkar Grandson : "ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் வினை உண்டு" : மிரட்டுல் விடுக்கும் தொனியில் பேசிய சாவர்க்கரின் பேரன்..
ஆர்எஸ்எஸ் நிறுவனர்களில் ஒருவரான ஹெட்கேவார், வி.டி. சாவர்க்கர் ஆகியோரை பற்றிய அத்தியாயங்கள் பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து நீக்கப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அறிவித்தது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அதிரடி:
அதன் தொடர்ச்சியாக, பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான கே.பி. ஹெட்கேவார், இந்துத்துவ கொள்கை வடிவமைப்பாளர்களில் ஒருவரான வி.டி. சாவர்க்கர் ஆகியோரை பற்றிய அத்தியாயங்கள் பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து நீக்கப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
இந்த அத்தியாயங்கள் கடந்த ஆண்டு, பாஜக ஆட்சியில் இருந்துபோது சேர்க்கப்பட்டன. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் அறிவிப்புக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக முழுவதும் போராட்டம் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சாவர்க்கரின் பேரன், "இது தலைகீழ் விளைவை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார். கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, சாவர்க்கர் பற்றிய குறிப்புகளை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்திருக்கிறதே என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மிரட்டுல் விடுக்கும் தொனியில் பேசிய சாவர்க்கரின் பேரன்:
அதற்கு பதில் அளித்த அவர், "அந்த அத்தியாயத்தை நீக்குவதன் மூலம் மாணவர்கள் சாவர்க்கரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று காங்கிரஸ் நினைக்கலாம். ஆனால், மாணவர்கள் மிகவும் கூர்மையானவர்கள். சாவர்க்கரைப் பற்றிய பல தகவல்கள் சமூக ஊடகங்களில் கிடைக்கின்றன.
சாவர்க்கர் ஸ்மாரக் இணையதளத்தில் சாவர்க்கர் பற்றிய இலக்கியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கன்னடத்தில் கூட வெளியிடுகிறோம். பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாயம் நீக்கப்பட்டால் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.
நியூட்டனின் மூன்றாம் விதியை மேற்கோள் காட்டி பேசிய ரஞ்சித் சாவர்க்கர், "உண்மையில், நீங்கள் இன்னும் அடக்கினால். அது மீண்டும் எழும் என்று நான் கூறுவேன். அது ஒரு இயற்கை எதிர்வினை. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் வினை உண்டு" என்றார்.
கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பின் முகப்புரையை மாணவர்கள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், கடந்த 30 ஆண்டுகளில் வேறு எந்த கட்சியும் பெற்றிராத வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தது. இதை தொடர்ந்து, மாநில நலன்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.