Sachin Tendulkar: மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்...!
மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்
மராட்டிய மாநிலத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் புன்னகைக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் முன்னிலையில் மராட்டிய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் மருத்துவ கல்வி துறையும் இணைந்து கையெழுத்திட்டன. இதன்படி, புன்னகைப்பது, சுவைப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கான வாய்வழி சுகாதாரங்களை ஊக்குவிக்கும் வகையில் தூதராக சச்சின் டெண்டுல்கர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதற்கான தூதராக இருப்பார். இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து அவர் இதற்கு ஒப்பு கொண்டதாக பட்னாவிஸ் கூறினார்.
கடந்த மார்ச் மாதத்தில், சுகாதாரமிக்க நாட்டுக்காக, கை சுகாதாரம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை சுட்டி காட்டும் நோக்கத்தில் அதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சாவ்லான் ஸ்வஸ்த் இந்திய திட்டத்திற்காக முதன்முதலில், கை தூதராக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டார்.
சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கின்றனர். ஆம் ஏதோ ஒரு சில மேட்ச்களில்தான் அவர் குறைந்த ரன்களில் திரும்பியுள்ளார். மற்றபடி அவரை கட்டுப்படுத்துவது அப்போதிருந்த வாசிம் அக்ரம், கர்ட்லி அம்ப்ரோஸ், கர்ட்னி வால்ஷ், வக்கார், அக்தர், சமிந்தா வாஸ், மெக்ராத், பிரெட் லீ, கில்லெஸ்பி, ஆலன் டொனால்ட், மலிங்கா போன்ற ஆபத்தான வேகப்பந்து மற்றும் முத்தையா முரளிதரன், வார்னே, கார்ல் கூப்பர் போன்ற சுழற்பந்து ஜாம்பவான்களாலும் முடியாத விஷயமாகவே இருந்துள்ளது.
1994-ஆம் ஆண்டுக்கு பிறகு தனி ஒருவனாக இந்திய கிரிக்கெட் அணியை தாங்கி பிடித்தது சச்சின் மட்டுமே. அதனால்தான் அவர் இருந்தால் அணி வெல்லும், அவுட்டானால் தோற்கும் என்ற முடிவுக்கு வந்தனர் ரசிகர்கள். 11 பேர் கொண்ட அணி, ஆனால் ஒற்றை சிங்கத்தால் செயல்பட்ட ஒரு அணியாகவே இந்திய கிரிக்கெட் அணி காட்சியளித்தது. ஏப்ரல் 2012 -இல், டெண்டுல்கரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவிற்கு பரிந்துரைத்தார் . இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் சுறுசுறுப்பான விளையாட்டு வீரர் மற்றும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.