சபரிமலை யாத்திரை: தென்மாவட்ட பக்தர்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! முன்பதிவு உடனே!
சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களுக்காக மதுரை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
பெரும்பாலும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு, வாகனங்களை புக் செய்து மலைக்குச் சென்று வருவது வழக்கம். அதேநேரம் ரயிலில் பயணம் செய்து சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம். சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களுக்காக மதுரை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலையில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16 முதல் டிசம்பர் 27ம் தேதி வரை நடக்கிறது.
2026 ஜன14ல் மகரவிளக்கு பூஜை நடக்கிறது. சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹஜூர் சாஹிப் நந்தெத் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது (07111), சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கேரளாவின் கொல்லம் பகுதிக்குச் செல்லும். இந்த ரயில் நவம்பர் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை, வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை 5:40 மணிக்கு மகாராஷ்டிராவிற்கு சிறப்பு ரயில் (07112) இயக்கப்படும். இந்த ரயில் அடுத்த நாள் இரவு 9:30 மணிக்கு ஹஜூர் சாஹிப் நந்தெத்தைச் சென்றடையும்.
அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது H.S. நாந்தேட் கொல்லம் இடையே வருகின்ற 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1,8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதேபோல், மறு மார்க்கமாக கொல்லம் H.S. நாந்தேட் இடையே வருகின்ற 22, 29 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளில் இரு மார்க்கமாகவும் 9 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த சிறப்பு ரயில் திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜாபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை மற்றும் புனலூர் வழியாக செல்லும்





















