Sabarimala Pilgrims: சபரிமலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி..! ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு, செய்ய வேண்டியது என்ன?
Sabarimala Pilgrims: சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு வழங்கும் திட்டத்தை, கேரள அரசு அறிவித்துள்ளது.
Sabarimala Pilgrims: சபரிமலை பகதர்கள் எளிதில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள, தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு:
நவம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ள மண்டல- மகரவிளக்கு யாத்திரை காலத்தில், சபரிமலை கோய்லுக்கு வரும் பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தேவசம் அமைச்சர் அமைச்சர் விஎன் வசவன், இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் காப்பீட்டுத் தொகையை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) மூலம் வழங்க உள்ளது. ஒருவேளை எதிர்பாராத சம்பவங்களால் பக்தர்கள் இறந்தால், உடலை வீட்டிற்கு கொண்டு வர தேவசம்போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும். ரூ.5 லட்சம் நிதியும் வழங்கும்" என்றார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
தொடர்ந்து பேசுகையில், “வருடாந்திர யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் கூட்டம் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும்” அ,மைச்சர் கூறினார். சபரிமலை யாத்திரை காலங்களில் 13,600 போலீசார், 2,500 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் 1,000 துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் போதிய குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய நீர் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மருத்துவ வசதிகள்:
நிலக்கல், சன்னிதானம் (கோயில் வளாகம்), மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி, பத்தனம்திட்டா மற்றும் காஞ்சிரப்பள்ளி பொது மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. பம்பா, அப்பாச்சிமேடு, சன்னிதானம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளிலும் சிறப்பு இருதய சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் பாம்பு கடித்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு விஷ எதிர்ப்பு சிகிச்சையை உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதவிக்குழுக்கள் ஏற்பாடு:
சபரிமலை யாத்திரை தொடர்பாக தங்களது பாதுகாப்பான மண்டல திட்டத்தை செயல்படுத்தும் ஒரு பகுதியாக, மோட்டார் வாகனத் துறை மூன்று கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்து 20 குழுக்களை தயார்படுத்தியுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் காவல் உதவிச் சாவடிகள் திறக்கப்படும் மற்றும் பாரம்பரிய வனப் பாதைகளில் மலையேறும் பக்தர்களுக்கு உதவ வனத்துறை 132 சேவை மையங்களைத் திறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. வனவிலங்குத் துறையின் கீழ் 1,500 சுற்றுச்சூழல் காவலர்கள் மற்றும் யானைப் படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
யாத்ரீகர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வழங்க TDB சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 15 லட்சம் பேருக்கு அன்னதானம் (இலவச உணவு) வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 20 லட்சம் ஐயப்ப பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் வசவன் தெரிவித்துள்ளார்.