சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
ஐயப்ப பக்தர்களின் பயணத்திற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்குகின்றனர்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இப்பக்தர்களின் பயணத்திற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்குகின்றனர்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து அதிகப்படியான ஐயப்ப பக்தர்கள், யாத்திரை மேற்கொள்வதால், இம்மாநிலங்களில் இருந்து அதிக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. இந்தவகையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை 30 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.
தற்போது இதன் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்து, கூடுதலாக 18 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன்மூலம் வரும் ஜனவரி மாதம் வரையில் 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு சிறப்பு ரயிலும், 2, 4, 5, 10, 14 ரயில் சேவைகளை வழங்குகிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், சபரிமலை சீசனையொட்டி இயக்கப்படும் 48 சிறப்பு ரயில்கள் 350க்கும் அதிகமான முறை இயங்குகிறது. இந்த சிறப்பு ரயில்களை ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான சிறப்பு ரயில்கள், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியே செல்கிறது. இந்த சிறப்பு ரயில்களில் பக்தர்கள், முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றனர்.





















