சபரிமலை ஐயப்பன் கோயில்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விபத்து காப்பீடு, புதிய கட்டுப்பாடுகள் & முக்கிய தகவல்கள்!
கேரள மாநில எல்லைக்குள் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் அதில் மரணம் அடையும் ஐய்யப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும்.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
சபரிமலையில் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். வரும் நவ.16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவ.17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் தொடங்க உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் இவர்களின் பாதுகாப்பு, தரிசனம் மற்றும் உரிய வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான பல்வேறு விதிமுறைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. தரிசனத்துக்கு முன்பதிவு அவசியம். அதில் குறிப்பிட்ட நேரத்தை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் நெரிசல் தவிர்க்கப்படும். இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த காலங்களில் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழை ஆகிய பகுதிகளில் விபத்தில் மரணம் அடையும் அய்யப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. நடப்பு சீசன் முதல் இந்த திட்டம் கேரளா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது கேரள மாநில எல்லைக்குள் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் அதில் மரணம் அடையும் ஐய்யப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும்.
மேலும் இறந்தவர்களின் உடலை அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மாநிலத்திற்குள் ரூ.30 ஆயிரமும், வெளி மாநில பக்தர்களுக்கு ரூ.1 லட்சம் வரையும் வழங்கப்படும். இதுபோல் மலை ஏற்றத்தின் போது மரணம் ஏற்பட்டால் ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த நிதி ஆன்மிக நல நிதியில் இருந்து வழங்கப்படும். இந்த நிதிக்காக ஆன்லைன் மூலம் சாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து ரூ.5 பெறப்படும்.கடந்த ஆண்டு 55 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் கடந்த ஆண்டு 48 பக்தர்கள் சபரிமலையில் மலை ஏறும் போது மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது





















