"இதுக்கெல்லாம் இந்தியாவுல போர் நடந்ததே இல்ல" - இஸ்ரேல் விவகாரம் குறித்து ஓபனாக பேசிய ஆர்எஸ்எஸ்
இந்த மோதலை, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்கள் போரில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடந்தி வரும் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த மோதலை, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்கள் போரில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், 4,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர்.
இந்தியா எடுத்த நிலைபாடு என்ன?
இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா என இஸ்ரேல் அரசை நோக்கி மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலையும் சரி, ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலையும் சரி இந்திய அரசு கண்டித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். அதுமட்டும் இன்றி, இரு நாட்டு கொள்கை நிலைபாட்டில் உறுதியுடன் இருப்பதாக பாலஸ்தீன அதிபருடன் பேசும்போது கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. இந்து மதம், அனைத்து பிரிவினரையும் மதிப்பதாகவும் தற்போதைய ஹமாஸ் - இஸ்ரேல் போருக்கு வழிவகுத்தது போன்ற பிரச்னைகளை இந்தியா ஒருபோதும் கண்டதில்லை என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் சொன்ன பரபர கருத்து:
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், மன்னராக முடிசூட்டி கொண்டு 350 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "இந்த நாட்டில், அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் மதிக்கும் ஒரு மதம், கலாச்சாரம் உள்ளது. அதுதான் இந்து மதம். இது இந்துக்களின் நாடு.
அதற்காக, மற்ற எல்லா (மதங்களையும்) நாம் நிராகரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லத் தேவையில்லை. இதை இந்துக்கள் மட்டுமே செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதைச் செய்யவில்லை.
மற்ற எல்லா இடங்களிலும் மோதல்கள் நடந்து வருகின்றன. உக்ரைன் போர், ஹமாஸ்-இஸ்ரேல் போர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் நாட்டில், இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் போர்கள் நடந்தது இல்லை. சிவாஜி மகாராஜ் காலத்தில் நடந்த படையெடுப்பும் அப்படித்தான். ஆனால், இந்த பிரச்னையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்" என்றார்.