(Source: ECI/ABP News/ABP Majha)
Chandrayaan 3 : 'இந்தியாவின் ராக்கெட் பெண்' : சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றி உலக நாடுகளை வியக்கவைத்த ரித்து கரிதால்
Chandrayaan 3 : உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா.
Chandrayaan 3 : பூமியின் துணைக்கோளான நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3, இன்று மதியம் 2:35 மணிக்கு ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா. இந்தியாவின் ராக்கெட் பெண் என அழைக்கப்படுகிறார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானியாக உள்ளார். மங்கள்யான் (செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம்) திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைநிமிர செய்த நம் நாட்டின் ராக்கெட் பெண் குறித்து கீழே காண்போம்:
கடந்த 1996ஆம் ஆண்டு, லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்எஸ்சியும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) எம்டெக் படிப்பையும் முடித்தார். படிக்கும் போதே ஆசிரியர்களே வியக்கும் வைக்கும் அளவுக்கு படித்து தற்போது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சிறு வயதிலிருந்தே விண்வெளியை ஆராய்வதில் ஆர்வத்தை வளர்த்து கொண்ட ரித்து, இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதை பள்ளி நாட்களில் பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.
கடந்த 1997ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் இஸ்ரோவில் சேர்ந்தார். இஸ்ரோவின் பல மதிப்புமிக்க திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். பல திட்டங்களில் செயல்பாட்டு இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
சர்வதேச மற்றும் தேசிய ஆய்விதழ்களில் 20 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இளம் விஞ்ஞானி விருது, இஸ்ரோ குழு விருது, ஏஎஸ்ஐ குழு விருது, சொசைட்டி ஆஃப் இந்தியா ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி மற்றும் இண்டஸ்ட்ரீஸின் ஏரோஸ்பேஸ் வுமன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
சந்திரயான் 3 திட்டம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:
கடந்த 2019ம் ஆண்டு தோல்வியுற்ற சந்திரயான் 2 திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் சந்திரயான் 3. தோல்விகளில் இருந்து கிடைத்த படிப்பினையை கொண்டு, தவறுகளை திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது சந்திரயான் 3 விண்கலம்.
சந்திரயான் 2-ல் ஆர்பிட்டார், ரோவர் மற்றும் லேண்டர் ஆகிய மூன்று அமைப்புகள் இருந்தன. ஆனால், சந்திரயான் 3ல் ரோவர் மற்றும் லேண்டர் ஆகிய அமைப்புகள் மட்டுமே உள்ளன.
அதேநேரம் புரபல்சன், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று முக்கிய பகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கிலோ மீட்டர் தூரம் வரையில் லேண்டர் கருவியை, புரபல்சன் கொண்டு செல்ல உள்ளது. அதோடு, நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் துருவ அளவீடுகளை ஆய்வு செய்ய ஸ்பெக்ட்ரோ-பாலாரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பிளானட்டரி எர்த் (SHAPE) என்ற நாசாவின் செயற்கைகோளையும் இந்த புரபல்சன் சுமந்த செல்ல உள்ளது.