”எனக்கு இதுதான் கடவுள்”.. அரசியலமைப்புச் சட்டத்திற்கு கோயில் கட்டி கும்பிடும் ஆசிரியர்...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கோயில் கட்டி தினந்தோறும் கும்பிட்டுவருகிறார் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கோயில் கட்டி தினந்தோறும் கும்பிட்டுவருகிறார் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு கோயில்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சிவதாசன் பிள்ளை. 71வயதான இவர் சமூக அறிவியல் ஆசிரியராக இருந்து பணிஓய்வு பெற்றவர். இவர் இந்தியாவின் ஆணி வேர்களில் ஒன்றான இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கோயில் கட்டியுள்ளதோடு, விளக்கும் ஏற்றி வழிபட்டு வருகிறார். இந்த கோயிலுக்கு மாணவர்கள் தினந்தோறும் வருகை தந்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமும் கொடுக்கிறார் சிவதாசன். கூடவே “அரசியலமைப்பே கடவுள்; அதுவே இந்த நாட்டின் சொத்து” என்று மலையாளத்தில் எழுதப்பட்ட ஸ்டிக்கரையும் கொடுத்து அனுப்புகிறார்.
3 செண்ட் நிலத்தில் சிவதாசனின் வீட்டிற்கு அருகில் கடந்த ஓராண்டிற்கு முன்பு நிறுவப்பட்ட இந்த கோயிலில் மகாத்மா காந்தி, விவேகானந்தர், அம்பேத்கர், நோபல் பரிசுப் பெற்ற மலாலா யுசாஃப்சாய் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாதிரி ஆகியவற்றின் புகைப்படங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
”அரசியலமைப்பு தான் கடவுள்”:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவதாசன் “இந்திய அரசியலமைப்பு தான் கடவுள் அதை நான் வழிபடுகிறேன். இது தான் இந்திய நாட்டின் அடிப்படை, நமது சகோதரத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் எதிர்காலமும். நான் என் கடவுளின் கொள்கைகளை வளர்க்க விரும்புகிறேன், அதனால் தான் நான் கோயில் ஒன்றை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார். இக்கோயிலுக்கு அரசியலமைப்புச் சட்ட கோயில் என்று பொருள்படும் வகையில் “பரனகதன ஸ்கேத்திரம்” என்று பெயர் வைத்துள்ளார்.
வகுப்பெடுக்கும் ஆசிரியர்:
மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய தலைமுறைக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றி எந்த புரிதலும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை சுதந்திர தினமும், குடியரசு தினமும் ஒரு விடுமுறை நாள். அரசியலமைப்பின் உணர்வைப் புகுத்தி அவர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதே எனது சிறிய முயற்சி. நாம் கடவுளை நிலைநிறுத்தினால், நாட்டில் சண்டையோ பிரச்சனையோ உருவாக முடியாது என்று நான் தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன். குழந்தைகள் கேள்வி கேட்பதற்கு பயப்படுகிறார்கள். ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே சரி என்று நினைத்துக்கொள்கின்றனர். நாம் சிறந்த குடிமகன்களை உருவாக்கவேண்டும். என்னைப் பொருத்தவரை அரசியலமைப்புச் சட்டம் தான் பைபிள் என்று உணர்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
ஓய்வு நேரத்தில் குழந்தைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அவசியம் பற்றி விளக்கமளிக்கிறார். கூடவே குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிமையாக அவர்களுக்கு வகுப்பெடுக்கிறார் சிவதாசன்.