Watch Video: தங்க கதவு.. கருவறை.. பக்தர்களை பரவசப்படுத்தும் அயோத்தி ராமர் கோயில்
அறக்கட்டளை வெளியிட்ட வீடியோவில் ராமர் கோயிலின் உள்புறம் எப்படி இருக்கும் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
பக்தர்களை பரவசப்படுத்தும் அயோத்தி ராமர் கோயில்:
இந்த நிலையில், கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், "500 ஆண்டுகால போராட்டத்தின் உ" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ராமர் கோயிலின் உள்புறம் எப்படி இருக்கும் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்துடன் வீடியோ காட்சி தொடங்குகிறது. அடுத்த காட்சியில், கட்டிடக்கலைஞர் ஒருவர், கோயில் தூணில் சிற்பம் செதுக்குவது பதிவாகியுள்ளது. கோயிலின் கருவறை, தங்கக் கதவுகள், தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கோவிலின் சுவர்கள் ஆகியவை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட எக்ஸ் வலை பதிவில், "உணர்வுப்பூர்வமான நாள். சமீபத்தில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்திக்கு வருமாறு அவர்கள் என்னை அழைத்துள்ளனர்.
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்நாளில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நான் காண்பது எனது அதிர்ஷ்டம்" என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
500 वर्षों के संघर्ष की परिणति pic.twitter.com/z5OTXivUFL
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) October 26, 2023
கடந்த 2019ஆம் ஆண்டு, அயோத்தி வழக்கில் ராமர் கோயிலை கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிட, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை பிரதமர் நரேந்திர மோடி அமைத்தார். அதே ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி பூமி பூஜை செய்தார்.
ராமர் மற்றும் சீதாவின் சிலைகளை செய்ய ஷாலிகிராம் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கற்கள் நேபாளத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கற்கள், 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது. நேபாளத்தின் காளி கண்டகி நதியிலிருந்து இந்த கற்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ராமர் சிலையின் உயரம் 5 முதல் 5.5 அடி வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் ராமர் சிலையில் உயரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.